
பகவத் இராமாநுஜர் முதலான மஹான்களால் வளர்க்கப்பட்ட வைணவ சமயம், இன்று வரை பல கற்றுணர்ந்த சான்றோர்களால் ப்ரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில், அவர்களுள் முக்கியமான ஒருவராகத் திகழ்பவர் வேளுக்குடி உ. வே.க்ருஷ்ணன் ஸ்வாமி ஆவார். வேதாந்த வித்வானும், புகழ் பெற்ற உபந்யாஸகருமான வேளுக்குடி உ.வே.வரதாசார்ய ஸ்வாமியின் மகனாகப் பிறந்த இவர், இளம் வயதில் ஆன்மிகம் மற்றும் ஆங்கிலக் கல்வி இரண்டிலும் தேர்ச்சி பெற்று, பின்பு தன்னை முழுவதுமாக ஆன்மிகப் பணிக்கே ஈடுபடுத்திக்கொண்டார். எந்த ஒரு நுட்பமான ஆன்மிகக் கருத்தையும் அனைத்து மக்களும் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கும்படி எளிமையாக எடுத்துரைக்கும் சொல்வன்மை படைத்தவர். அதேபோல், தனது வருணனைகளால் கேட்பவர்களை புராண காலத்துக்கோ, எந்த ஒரு திருத்தலத்துக்கோ, ஆழ்வார்களின் மன நிலைக்கோ மானஸீகமாகவே அழைத்துச் செல்லும் உருக்கத்தையும் கொண்டவர். இதனால் பாரதத்திலும், பிற நாடுகளிலும், இவரது சொற்பொழிவுகளைத் தொலைக்காட்சிகளிலும் நேரிலும் திரள் திரளாக மக்கள் கேட்டு மகிழ்கின்றனர்.
இப்படிப் பொதுவான தலைப்புகளில் சொற்பொழிவுகளை ஆற்றுவதோடு, வைணவ மரபின் ஆசார்யர்களால் இயற்றப்பட்ட நூல்களையும் ஆழமான உரைகளையும் பாரம்பரிய முறைப்படி, காலக்ஷேபமாகக் கூறுவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி. பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதியின் காலக்ஷேபங்களை பேயாழ்வார் அவதாரத் தலமான சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள ஶ்ரீ ஆதிகேசவப்பெருமாள் பேயாழ்வார் கோயிலில் கடந்த 11.03.2023 அன்று நிறைவு செய்திருக்கிறார்.
இது ஒரு நூலின் முடிவு மட்டுமல்ல; இதன் மூலம், ஸ்வாமி ஒரு அரிய தொண்டை செய்து நிறைவேற்றியிருக்கிறார். பன்னிரண்டு ஆழ்வார்களாலும் பாடப்பட்ட 23 திவ்ய ப்ரபந்தங்களுக்கும் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை நம்பிள்ளை போன்ற வைணவ ஆசார்யர்களால் இயற்றப்பட்ட அனைத்து உரை நூல்களையும், அதேபோல் இராமாநுச நூற்றந்தாதி, உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி ஆகிய ப்ரபந்தங்களின் உரைகளையும் ஸ்வாமி காலக்ஷேபமாகக் கூறி முடித்திருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளில், பல ஊர்களில், சுமார் 1500 அமர்வுகளில், 2800 மணி நேரத்துக்கும் மேல் ஸ்வாமி காலக்ஷேபங்களை நிகழ்த்தி, இந்த மகத்தான ஆன்மிகத் தொண்டை ஆற்றியுள்ளார். பிற்காலத்தில் அனைவருக்கும் கிடைக்கும்படி இந்த சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியோடு, வேளுக்குடி உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமியின் ஷஷ்ட்யப்த பூர்த்தி (அறுபதாவது பிறந்த நாள்) தொடக்க விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் வைணவத்தில் தலைசிறந்த வித்வான்களாகவும் உபந்யாஸகர்களாகவும் விளங்கும்
உ.வே.எம்.ஏ.வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமி, உ.வே. கே.பி.தேவராஜன் ஸ்வாமி, உ.வே.ஶ்ரீநிவாஸாசார்ய ஸ்வாமி ஆகியோர் கலந்துகொண்டு, ஸ்வாமியுடனான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவின் ஏற்புரையில் வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி, “எனது தந்தை உ.வே.வரதாசார்ய ஸ்வாமி தன்னுடைய காலக்க்ஷேபத்தை வழங்கும்போது ஆச்சாரியர்கள் மற்றும் ஆழ்வார்கள் அருளிய படைப்புகளின் கருத்துகளை எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படி எடுத்துரைப்பார். அதேபோல், இன்றைய தலைமுறையினரும் அப்படைப்புகளில் இருக்கும் கருத்துக்களின் சாராம்சத்தை மாற்றாமல் அனவரையும் ஈர்க்கும்படி சொல்ல வேண்டும்” என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து கிஞ்சித்காரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நாலாயிரத் திவ்யப் பிரபந்த போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.