சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தங்கராஜு – மனதை உருக்கும் கடைசி நிமிடங்கள்!

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தங்கராஜு – மனதை உருக்கும் கடைசி நிமிடங்கள்!
Published on

ஞ்சா கடத்தல் வழக்கில் நேற்று அதிகாலை சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார் சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜு சுப்பையா. அவர் செய்த குற்றத்தையோ, அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்தோ விமர்சனம் செய்யும் பதிவு அல்ல இது. மரண தண்டனைக்கு முன்பு அவரது கடைசி நாட்கள் குறித்து சில மனதை உருக்கும் சோக சம்பவங்களின் தொகுப்பு.

சமூக செயற்பாட்டாளரும், தங்கராஜுவை தூக்கு தண்டனையிலிருந்து மீட்டெடுக்கப் போராடியவர்களின் ஒருவரான கோகிலா அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில் தங்கராஜுவின் கடைசி நாட்கள் குறித்து தெரிவித்திருக்கும் சில கருத்துக்கள்…

“தங்கராஜுவுக்கு தூக்கு என்பது அனைவரும் எதிர்பார்த்த நிகழ்வுதான் என்றாலும், சக மனிதனின் உயிரிழப்பை ஜீரணித்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) காலை சிங்கப்பூர் சிறையில் இருந்த தனது மகனை பார்க்க தங்கராஜுவின் தாயார் பாப்பாவை அழைத்துச் சென்றேன். சிறைக்குச் செல்லும் வழியில் உற்சாகமாகப் பேசியபடியே இருந்தார் பாப்பா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகனை சந்திக்கப் போகும் ஒரு தாயின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தனது குடும்பத்துக்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட பெண்மணி அவர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சாலைத் துப்பரவுத் தொழிலாளியாக அவர் வேலை பார்த்துள்ளார்.

மகன் தங்கராஜுவை மறுநாள் தூக்கிலிடப் போகிறார்கள் என்ற விவரம் அவருக்குத் தெரியாது. மகன் தன்னிடம் நன்றாகப் பேசியதாகவும், தங்கராஜுவின் கடந்தகால பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தனது திருமண நாள் குறித்தெல்லாம் பேசி மகிழ்ந்ததாகவும் அவர் கூறினார். ‘என் மகன் தங்கராஜு நன்றாக இருக்கிறார்’ என்று அவர் என்னிடம் தெரிவித்தபோது வருத்தமாக இருந்தது. இனி அந்த மூதாட்டியால் தனது வாழ்நாளின் இறுதி வரை தனது மகனை மீண்டும் சந்திக்கவே இயலாது. மகனின் குரலைக் கேட்க முடியாது என்ற உண்மை என் மனதை தாக்கியபோது, சில நொடிகள் நான் நிலைகுலைந்து போனேன்.

தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஒரு வாரத்துக்கு முன்னர் சம்பந்தப்பட்ட கைதிக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கிறது. அதன் பிறகு கைதியும் குடும்பத்தினரும் அனுபவிக்கும் மன உளைச்சலை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. தூக்கு தண்டனையை எதிர்நோக்குபவரின் சின்னச்சின்ன ஆசைகளை நிறைவேற்றுகிறது சிங்கப்பூர் சிறைத்துறை. அதன்படி, மரண தண்டனைக் கைதி தனக்குப் பிடித்தமான உடையை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். குடும்பத்தாருக்கு விவரம் தெரிவித்து, தமக்குப் பிடித்தமான உணவுகளைக் கொண்டு வரச் செய்து சாப்பிடலாம்.

தங்கராஜுவுக்கு இந்தச் சலுகைகள் வாய்த்தன. அவரும் தனது குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்து, சிக்கன் ரைஸ், பிரியாணி, ஐஸ்கிரீம் சோடா, மைலோ பானத்தின் சுவைகொண்ட இனிப்புகள் ஆகியவற்றைச் சாப்பிட்டுள்ளார். எனினும், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் அதிகமாக உணவு உட்கொண்டதில் தனது உடல் எடை சுமார் பத்து கிலோ அளவுக்கு கூடிவிட்டதாகவும் அதன் காரணமாக தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவதாகவும் தங்கராஜு கூறியுள்ளார். ‘எடை கூடிவிட்டால் தூக்கிலிடப்படும்போது எனது உயிர் பிரிய அதிக நேரம் பிடிக்குமோ என்னவோ?’ என்று அவர் தனது குடும்பத்தாரிடம் கூறினாராம். எந்தவிதமான சலனமும் இன்றி அவர் இவ்வாறு குறிப்பிட்டதை தனது வாழ்நாள் முழுவதும் மறக்கவே இயலாது என்கிறார் தங்கராஜுவின் சகோதரி லீலா.

ரு வாரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ள கைதி, தன்னைப்போன்றே மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் மற்ற கைதிகளுக்கும் பிடித்த உணவுகளை வாங்கிக்கொடுக்கலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட தங்கராஜு மீன் பர்கர், சமோசா, குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கித் தந்துள்ளார்.

இறக்கும் முன்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ள தங்கராஜு விரும்பவில்லை. எனினும் குடும்ப உறவினர் ஒருவர் விடுத்த உருக்கமான வேண்டுகோளை அடுத்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள சம்மதித்துள்ளார். குடும்பத்தாருடன் தான் கடந்த காலங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எடுத்து வரச் செய்து, அவற்றைப் பார்த்து பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார். அந்த இனிமையான நினைவுகள் தன்னை தூங்கவிடவில்லை என்றும் பின்னர் கூறி உள்ளார்.

ண்டனை நிறைவேற்றப்பட சில மணி நேரங்கள் மட்டுமே இருந்த நிலையில், தங்கராஜு சார்பில் கடைசி நேர முயற்சியாக சிங்கப்பூர் அதிபரிடம் மேலும் ஒரு கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பலன் இல்லை. தங்கராஜுவின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. அவர் தனக்குப் பிடித்தமான இசையைக் கேட்டு ரசிக்க, சிடிக்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும், சிடிக்கள் வாங்கும் பொருட்டு பணம் செலவழிக்க அவர் விரும்பவில்லை. அந்தத் தொகையை குடும்பத்துக்கு அளிக்க விரும்பினார்.

‘ஒருவேளை மட்டுமே உணவருந்தினால் எனது எடை குறைவாக இருக்கும். அதனால் என் சடலத்தை தூக்கிச் செல்பவர்களின் சிரமும் குறையும் அல்லவா?’ என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். தங்கராஜுவின் இரண்டு இறுதி ஆசைகளை எங்களால் நிறைவேற்ற முடியாமல் போனது. மலேசியாவின் சிலாங்கூர் நகரில் உள்ள கோயிலில் இருந்து ஹனுமன் ருத்ராட்சியும் குங்குமமும் வேண்டும் என்று கேட்டார். அவற்றுக்கு ஏற்பாடு செய்தோம். எனினும் சிறைத்துறை அவற்றை தங்கராஜுக்கு அளிக்க அனுமதிக்கவில்லை. அவரது உயிரை எடுத்துக்கொள்ளும் நிலையில், இதுபோன்ற சிறு விருப்பங்களையும் அவர்கள் அனுமதிக்க மறுப்பது ஏன்? என்று தங்கராஜுவின் குடும்பத்தார் கேள்வி எழுப்புகின்றனர்.

தூக்கிலிடப்படும் முன்பு சிறைக் காவலர்கள் தனக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இடத்தை காண்பிப்பர் என்றும் தூக்கிலிடப்படும் முறை குறித்து விவரிப்பர் என்றும் குடும்பத்தாரிடம் தங்கராஜு கூறியுள்ளார். இதற்கு முன்பு எந்தக் கைதியும் இவ்வாறு தகவல் தெரிவித்ததில்லை என்றே நினைக்கிறேன்.

தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் தங்கராஜுவின் பொருட்களை சிறை நிர்வாகம் அவரது குடும்பத்தாரிடம் அளித்தது. இந்தத் தகவலை அவரது குடும்பத்தார் என்னிடம் தெரிவித்தபோது அவர்களுடைய குரலில், இழப்பால் ஏற்பட்ட ஒருவித நடுக்கம் இருப்பதை உணர்ந்தேன். இனி, தங்கராஜுவை பார்க்க இயலாது. இந்நிலையில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அப்பொருட்களைப் பார்க்கும்போது குடும்பத்தாருக்குப் பலதரப்பட்ட உணர்வுகள் ஏற்படவே செய்யும்.

தங்கராஜுவின் உடைகள், கைதாகும்போது அவர் அணிந்திருந்த மோதிரம், காலணிகள், கையில் கட்டியிருந்த புனித கயிறு ஆகியவற்றை மட்டுமே இனி அவரது நினைவாக குடும்பத்தார் வைத்திருக்க இயலும்" என்று உருக்கமாகக் குறிப்பிடுகிறார் கோகிலா அண்ணாமலை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com