அரசியல் களம்: இந்த வாரம், இவ்ளோதான்!

அரசியல் களம்:  இந்த வாரம், இவ்ளோதான்!

#1 - 80 நாட்களாக தொடரும் மணிப்பூர் மாநில கலவரத்தின் ஒரு பகுதியாக குக்கி இனத்தைச் சேர்ந்த பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க அரசின் இயலாமையை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டடத்தில் இறங்கியிருக்கிறார்கள். சமீப காலங்களில் சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ள மோசமான நிகழ்வு இது. இத்தகைய கொடிய செயலை செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தாமாக முன் வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், வகுப்புவாத கலவரம் நடக்கும் பகுதியில் பெண்களை வன்முறைக்கான கருவிகளாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அரசியலமைப்பு முற்றிலும் தோல்வி அடைந்திருக்கிறது. பிரச்னையில் அரசு தலையிடாவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

#2 பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் பெங்களூரில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி பா.ஜ.க அரசை வீழ்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வகையில் 26 அரசியல்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்கட்சிகள் “இந்தியா” என்றும் புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்னும் பொருளில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி வெற்றி பெற்றால், காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி மீதோ பிற பதவிகள் மீதோ விருப்பமில்லை என்றும் அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதி காக்கப்பட வேண்டும் முக்கியம் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.

#3 உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இரண்டு நாட்கள் தொடர்ந்ன. பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருநது கிளம்பிய முதல்வர் ஸ்டாலின், பொன்முடி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகளுக்கு கண்டனத்தை தெரிவித்தார். பாஜக அரசால் அமலாக்கத்துறை ஏவப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை. வடமாநிலங்களில் பயன்படுத்திய உத்தியை தமிழ்நாட்டில் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தைத் திசை திருப்புவதற்காக பாஜக செய்யும் தந்திரம்தான் இந்த அமலாக்கத்துறை சோதனை என்று விமர்சித்தார். கைது நடவடிக்கைகள் எதுவும் இல்லையென்றாலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்தன. அமைச்சர் பொன்முடியையும் அவரது மகனையும் சென்னை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தது.

#4 காவிரியில் போதுமான தண்ணீர் இல்லையென்றும் கர்நாடக மக்களின் குடிநீர் தேவை போக எஞ்சியிருந்தால் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைவான மழைப்பொழிவு இருந்து வருவதாகவும், குடிநீர் தேவைக்கே பற்றாக்குறை நிலவுவதாகவும் மாண்டியா பகுதியைச் சேர்ந்த கர்நாடக காங்கிரஸ் அமைச்சரான செலுவராயசாமி தெரிவித்திருந்தார். பெங்களூரில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூடியிருந்த நிலையில் காவிரி பிரச்னை பேசுபொருளானது. ஆனால், போதுமான தண்ணீர் வந்தததும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று துணை முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

#5 நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியது. மணிப்பூரில் மே 4 ஆம் தேதி இரண்டு பெண்கள் நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதால் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் பரபரப்பு நிலவியது. எதிர்க்கட்சிகளின் அமளிகளால் திங்கட்கிழமை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 வரை நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் முக்கியமான 31 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com