தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டம் முறையாக நடைபெறுவதில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாருகாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தனியார் நிலத்தில் பணிகள் நடைபெற்றதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் முறையிட்டார்.
அதில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் , தனி நபரின் விவசாய நிலத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்கள் பராமரிப்பது, போன்ற வேலைகளில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதனால், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த உத்தர விட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார். இதன் பொருட்டு அவர் தனியார் நிலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்கள் வேலை செய்ததற்கான தகுந்த ஆதாரத்தையும் மனுதாரர் சமர்ப்பித்தார்
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த ஆதாரங்களை பார்வையிட்ட நீதிபதிகள் அதை பார்த்து தங்களது அதிருப்தியினை வெளிபடுத்தினார்கள். இந்த வழக்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை செயலரை இணைக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.