முடிவுக்கு வந்த 100 ஆண்டுகால சென்னை மாநகராட்சி சட்டம்

முடிவுக்கு வந்த 100 ஆண்டுகால சென்னை மாநகராட்சி சட்டம்

கர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகளால் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சி சட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

வந்தாரை வாழவைக்கும் சிங்காரச் சென்னை வாழ வழியின்றி வந்தவர்களுக்கு வாழ்வாதாரத்தை தேடித் தந்து சோறு போடும் வங்கக்கரையோர பூமி. சாதியும், மதமும், மொழியும் சென்னைக்குக் கிடையாது. அரசியல் தலைவர்களை உருவாக்கும் ஊர். பல வரலாற்று சுவடுகளைக் காத்து வரும் மண். இந்தியாவிலேயே மிகப் பழமையான மாநகராட்சி சென்னை மாநகராட்சிதான். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ளதோ 21 மாநகராட்சிகள். ஆனால், தனித்துவத்துடனும் தன்னாட்சி அதிகாரத்து டனும் செயல்பட்டு வந்தது சென்னை மாநகராட்சி. 

சென்னை மாநகரத்தின் வரலாறு 300 ஆண்டுகளைக் கடந்தது. 1919 முதல் தனிச்சட்டம் இயற்றப்பட்டு செயல்பட்டு வந்தது இம்மாநகராட்சி நிர்வாகம். அதனால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் சென்னை மாநகராட்சிக்கு பொருந்தாமல் இருந்து வந்தது. அத்துடன் ஐஏஎஸ் அதிகாரிகளைத் தவிர மற்ற அதிகாரிகள், பணியாளர்கள் என அனைவரும் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே பணியிடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.

இதனால் வளர்ச்சிப் பணிகளுக்கு உலக வங்கி உள்ளிட்ட பலவற்றில் கடன் பெறுவதும் வெகு இயல்பான ஒன்றாக இருந்து வந்தது. அதிலும் பெரிய அளவில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த புதிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் சென்னை மாநகராட்சிக்கும் பொருந்தும். 

நகர்புற நிர்வாகத்தின் கீழ் சென்னை மாநகராட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே இருந்த சென்னை மாநகராட்சி விதிப்படி இனி விளம்பரப்பட பலகைகளோ பேனர்களோ வைக்க முடியாது. புதிய விதிகளின்படி மட்டுமே வைக்க முடியும். அதேபோல பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காகவும் இனி அரசின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஏராளமான விதிகள் ஏற்கனவே இருந்த விதிகளுக்கு முரணாக உள்ளது. இதனால் புதிய விதிகளில் சில திருத்தங்களை சென்னை மாநகராட்சிக்கு மேற்கொள்ள முன்வைக்கப்பட்ட பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் சென்னை மாநகராட்சியின் தனித்துவமும் தன்னாட்சி அதிகாரமும் பறிபோய் விட்டதாக பலரும் குமுறுகின்றனர். 

கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகளுக்கு காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பழமையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த சென்னை மாநகராட்சியின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டதால் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com