முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவையின் 10-வது கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டுக்கான முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரியில் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், அதில் இடம்பெறவுள்ள திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக சேர்ந்துள்ள நிலையில், அதன் பிறகு பத்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவையின் 10-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. அத்துடன், தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு விவாதங்களில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பும், பதிலளிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் ஊரக கடன்கள், வறுமை ஒழிப்பு மற்றும் முதலமைச்சர் வசம் இருந்த சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உதயநிதிக்கு அந்த அமைச்சரவையில் 10 வது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.