புயலை கிளப்பிய 12 மணி நேர வேலை மசோதா - பா.ஜ.க வழியில் செல்லும் தி.மு.க!

புயலை கிளப்பிய 12 மணி நேர வேலை மசோதா - பா.ஜ.க வழியில் செல்லும் தி.மு.க!

நேற்று தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பணி நேர மசோதா நிறைவேற்றப்பட்டது. இதுவரை 8 மணி நேரமாக இருந்த வேலை நேரம், தற்போது 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க தந்துள்ள விளக்கமும், அது தொடர்பான சர்ச்சைகளும் தி.மு.க கூட்டணிக்கட்சிகளையே அதிருப்தியில் இருக்க வைத்துள்ளன.

முதலாளிகளுக்கு நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதற்கும் தொழில் வணிகத்தை எளிதாகச் செய்யவும், அயல் நாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இதுபோன்ற தொழிலாளர் சட்டத்திருத்தங்கள் அவசியமானவை என்பது தி.மு.க அரசின் நிலைப்பாடு. தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, இதே மசோதாவை கடுமையாக எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்பதால் தொழிலாளர்கள் வரவேற்பார்கள். வாரத்திற்கு 48 மணி நேர வேலை என்பதில் எந்த மாற்றமும் இல்லையென்று தமிழக அமைச்சர்கள் விளக்கம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும், தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அமைச்சர்களின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

வேலை நேரம் திருத்த சட்டத்தைக் கண்டித்து திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட தி.மு.க கூட்டணிகள் எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். குறிப்பாக பா.ஜ.க அரசு கொண்டு வந்த திட்டத்தை தி.மு.க நடைமுறைக்கு கொண்டு வருவதுதான் அவர்களுக்கு எதிர்ப்புக்கான முக்கியமான காரணம்.

சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது, தொழிற்சாலைகளில் நெகிழ்வுத்தன்மை வரவேண்டும் என்பதற்காக சட்டம் கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்ததற்காக நாங்களும் இதைக் கொண்டு வருவதாக யாரும் நினைக்க வேண்டாம். குறிப்பிட்ட சில தொழிலுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றெல்லாம் விளக்கம் தந்தார்.

தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் அமல்படுத்தப்படும். வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. எந்ததொழிலார்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். வாரத்திற்கு 48 மணி நேரம் பணியாற்ற வேண்டும்.

48 மணி நேரத்தை 4 நாட்களில் செய்து முடித்துவிட்ட பிறகு 5 வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் ஏற்கனவே உள்ளது. புதிய திருத்த மசோதா, அனைத்து தொழில்களுக்கும் பொருந்தாது என்றெல்லாம் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தாலும் பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் இதை முன்வைத்து பணி நேரத்தை உடனே அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரானா தொற்றுக்குப் பின்னர் கணிசமான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை அறிமுகமானது. இன்னும் பல நிறுவனங்களில் இது தொடர்கிறது. இந்நிலையில் பணி நேரம் உயர்த்தப்பட்டதால் வீட்டிலிருந்து எந்நேரமும் பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com