காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட உதவி தலைமை ஆசிரியை!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட உதவி தலைமை ஆசிரியை!

புதுக்கோட்டை மாவட்டம், பிலிப்பட்டியில் உள்ளது அரசு நடுநிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் பயிலும் 15 பேர் அடங்கிய மாணவிகள் கால்பந்து விளையாட்டுக் குழு ஒன்று கடந்த 15ம் தேதி தொட்டியத்துக்குச் சென்றது. அங்கு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு விட்டு, மீண்டும் வீடு திரும்புகையில் வழியில் கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்று ஆணையில் குளிக்கச் சென்றபோது அந்த அணையில் மூழ்கி நான்கு மாணவிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்த மாணவிகளின் பெற்றோர் முதல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து மாணவிகளைச் தொட்டியத்துக்குக் கூட்டிச் சென்ற இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகக் கருதி தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதோடு, மாணவிகள் உயிரிழந்த சம்பவம் மற்ற மாணவ, மாணவிகளின் மனநிலையையும் பாதிக்காமல் இருக்க அந்தப் பள்ளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்டக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை பள்ளி திறந்தவுடன் அந்தப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை பரிமளா, ஆற்றில் மூழ்கி பலியான அந்த நான்கு மாணவிகளின் பெற்றோர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இந்தச் சம்பவம் பள்ளி மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆயினும், சில பெற்றோர்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியை பரிமளா மற்றும் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் சிலர் சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது. அனைத்து மாணவ, மாணவியரும் காலை இறை வணக்க நிகழ்ச்சியின்போது கனத்த இதயத்தோடு தங்களோடு சேர்ந்து படித்த அந்த நான்கு மாணவிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க அந்தப் பள்ளிக்க வருகை தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வித் துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் பேசி, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com