
அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட் உரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் சத்துணவுத் திட்டத்திற்கு இணையான கவனமும், புகழும் திட்டத்திற்கு கிடைத்திருக்கிறது.
தமிழகம் முழுவதுமுள்ள 1543 அரசுப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்களுக்கு வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் இருப்பதால் பல இடங்களில் காலை உணவை மாணவர்கள் தவிர்த்துவிட்டு, பள்ளிக்கு வரும் நிலை இருந்தது வந்தது. இதை தவிர்க்கும் விதமாக, பள்ளிகளிலேயே காலை உணவு திட்டம் வழங்கும் திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தி.மு.க அரசு அறிமுகப்படுத்தியது.
கடந்த இரண்டு மாதங்களாக அமலில் உள்ள காலை உணவுத் திட்டத்தின் படி, பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காலை உணவு இலவசமாக அளிக்கப்படுகிறது. திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தில் தமிழக அரசு இறங்கியிருந்தது. அதன் காரணமாகவே, பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் திட்டம் அமலில் உள்ள 1543 பள்ளிகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் 1319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் 20 சதவீதம் வருகைப்பதிவு உயர்ந்திருக்கிறது. ஒரு சில பள்ளிகளில் 40 சதவீதம் வரை வருகைப்பதிவு உயர்ந்திருக்கிறது. 217 பள்ளிகளில் மாணவர்களின் வருகையில் எந்த மாற்றமும் இல்லையென்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் 100 சதவீத மாணவர்கள் வருகை உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த நிலையில் கிருஷ்ணகிரி, கரூர், நீலகிரி மாவட்ட பள்ளிகள் 96 சதவீத மாணவர்களின் வருகையை பெற்றுள்ளன.
முதல் கட்டமாக ஏறக்குறைய ஒரு லட்சத்து பத்தாயிரம் மாணவர்களும் இரண்டாவது கட்டத்தில் 56 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருப்பதாகவும் தமிழ்நாடு திட்ட கமிஷனின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதுவரை, தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள்.
தினமும் காலை உணவு அளிக்க, ஒவ்வொரு மாணவருக்கும் 12 ரூபாய் 70 பைசா செலவாகிறது. வரும் கல்வியாண்டு முதல் இன்னும் பல பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. சில இடங்களில் வேறு இடங்களில் சமைத்து எடுத்து வரப்பட்டு மாணவர்களுக்கு பரிமாறப்படுகிறது.
அடுத்த ஆண்டு முதல், மதிய உணவுத் திட்டம் போல், காலை உணவுத் திட்டமும் சம்பந்தப்பட்ட பள்ளி வளாகங்களிலேயே சமைத்து, அங்கேயே பரிமாறப்படும் என்பது தெரிகிறது. இந்நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, திட்டத்தை இன்னும் பல பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த உதவியாக இருக்கும்.
தற்போது ஒன்றரை லட்சம் மாணவர்கள் பயனாளிகளாக இருக்கிறார்கள். அடுத்த ஆண்டில் இதுவே 18 லட்சம் மாணவர்களாக உயரக்கூடும். எது எப்படியோ, சத்துணவுத் திட்டம் எம்.ஜி.ஆரின் பேர் சொல்லும் திட்டமாக இருந்தது. காலை உணவுத் திட்டம் ஸ்டாலினின் பேர் சொல்லும் திட்டமாக இருக்கக்கூடும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.