ருசிக்க மாம்பழம். நினைக்க மாடர்ன் தியேட்டர்ஸ். பயன்படுத்த ஸ்டீல் பிளாண்ட். சுற்றுலாவிற்கு ஏற்காடு. ஆன்மீகதிற்கு சுகவனேஸ்வரர். இது போன்ற பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சேலத்தில் உள்ள பெயர் பெற்ற பாலத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் உங்களுக்காக...
சேலத்தின் முக்கியப்பகுதியான டவுனில் உள்ளது வாசவி மஹால். இதன் வழியாக அருகில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான கோவிலான சுகவனேஸ்வரன் கோவிலுக்கு செல்லலாம் . கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள திருமணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உள்ள பாலத்தை வாசவி மஹால் பாலம், ஈஸ்வரன் கோவில் பாலம் என அழைக்கின்றனர். இதைக் கடந்தே கோவிலுக்கு செல்ல முடியும்.
ஆனால் இந்த பாலத்தின் உண்மையான பெயர் கஸ்தூரிபாய் காந்தி பாலம் ஆகும். இதைக் கட்டிய சேலத்தைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் தேவ்சண்ட்சேட் என்பவர் தனது மகள் காந்தி பாய் நினைவாக திருமணிமுத்தாற்றின் குறுக்கே பாலம் ஒன்றை மக்கள் பயன்படுத்தும் விதமாக கட்டியுள்ளார். சேட் தீவிரமான காந்தி பக்தர் என்பதால் அவர் தனது மகளுக்கு காந்தியையும் அவர் மனைவியின் பெயரையும் இணைத்து காந்திபாய் எனும் பெயரிட்டு இருந்தார்.
காந்தியையும் அவர் மனைவியையும் தீவிரமாக நேசித்த அவர் தான் கட்டிய பாலத்தை மகாத்மா காந்தியின் மனைவி அன்னை கஸ்தூரிபாய் காந்தி திறந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார். சரியாக அந்த நேரத்தில் சேலத்துக்கு மகாத்மா காந்தியும் கஸ்தூரிபாய் காந்தியும் வருகை தந்தனர். கிருஷ்ணதாஸ் சேட் எண்ணப்படியே இந்த பாலத்தை 2-9-1923 அன்று கஸ்தூரிபாய் காந்தி தனது திருக்கரங்களால் திறந்து வைத்து மகிழ்ச்சிப் படுத்தியுள்ளார். அன்று முதல் இந்த பாலத்துக்கு கஸ்தூரிபாய் காந்தி பாலம் என்று பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டது.
1972 ஆம் ஆண்டு சேலம் மணிமுத்தாற்றில் கடுமையான வெள்ளம் வந்தபோது சேதமடைந்த பாலம் பிறகு நன்கு உயரப்படுத்தி புதுப்பிக்கப்பட்டது. தற்போது மாநகராட்சியால் இந்த பாலம் உள்ள பகுதி ஆற்றோரம் சாலை என்று அழைக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த பாரம்பரியமிக்க பாலத்தின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறியம் வண்ணம் கல்வெட்டை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதுப்பிக்க ஆவண செய்ய வேண்டும் எனவும், மேலும் இந்த 2023 ஆம் ஆண்டின் நூற்றாண்டு காணும் இந்த கஸ்தூரிபாய் பாலத்தை புதுப்பித்து நடைபாதைகளை சீரமைத்து நூற்றாண்டு விழா கொண்டாட சேலம் மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.