ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வருபவர் கோவிந்த் வியாஸ். இவர் நேற்று இரவு ஜோத்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த வழியே ஒரு கார் மிகவும் வேகமாக வந்தது. அந்தக் காரை ஓட்டி வந்தவர் மிக வேகமாக வந்ததோடு, விதிகளை மீறி செல்போன் பேசியபடியும் காரை ஓட்டி வந்தார்.
இதைக் கண்ட கோவிந்த் வியாஸ் அந்தக் காரை நிறுத்துமாறு சைகை காட்டினார். ஆனால், அந்தக் கார் நிற்காமல் மிகவும் வேகமாகச் சென்றது. அதைத் தொடர்ந்து போக்குவரத்துக் காவலர் கோவிந்த் வியாஸ் அந்தக் காரை அரை கிலோ மீட்டர் தொலைவு விரட்டிச் சென்று மடக்கி இருக்கிறார். மேலும், காரை ஓட்டி வந்தவரிடம் செல்போன் பேசியபடி காரை ஓட்டி வந்ததால் 500 ரூபாய் அபராதம் கட்டும்படி கேட்டிருக்கிறார்.
ஆனால், அபராதம் கட்ட மறுத்து, அந்தக் காரை ஓட்டி வந்தவர் காவலரிடம் தகராறு செய்ய, அந்தப் போலீஸ்காரர் காரின் முன்பு சென்று நின்று கார் சென்று விடாமல் தடுத்து இருக்கிறார். ஆனால், அந்த காரை ஓட்டி வந்தவர் கடும் ஆத்திரத்தில் காரை எடுக்கவே, செய்வதறியாமல் தவித்த கோவிந்த் வியாஸ் காரின் பேனட்டில் விழுந்து இருக்கிறார். மிகுந்த கோபத்தில் இருந்த அந்த கார் ஓட்டுநர் காரை விடாமல் வேகமாக ஓட்டி இருக்கிறார். இதனால் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு அந்தப் போலீஸ்காரர் கார் பேனட்டில் வைத்து இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இதனால் அந்தப் போலீஸ்காரருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், அவரது செல்போனும் கீழே விழுந்து நொறுங்கி இருக்கிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருக்கிறது.
இதையறிந்த காவல்துறை விரைந்து சென்று போலீஸ்காரர் கோவிந்த வியாசை மீட்டு இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரையும் அதிரடியாகக் கைது செய்து இருக்கிறார்கள். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் பெயர் ஓமராம் தேவசி என்பதும், இவர் கல்லூரி மாணவர் என்பதும் தெரிய வந்தது. அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்துக் காவலர் ஒருவர் கார் பேனட்டில் தொங்கியபடி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.