கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி அமுதா. இருவருக்கும் வீடு கட்டும் போது பெற்ற வீட்டுக்கடன் பிரச்சினையால் அடிக்கடி தகராறு வரும். கணவன், மனைவி இருவரும் இதனால் சண்டையிட்டுக் கொள்வது அந்தப் பகுதி மக்களிடையே பிரசித்தம்.
இவர்களுக்குத் திருமணமாகிப் பத்து ஆண்டுகளாகிறது. இரண்டு மகள்களும், ஒரு மகனும் உண்டு. கடந்த புதன்கிழமை இரவு இதே போன்று தகராறு வந்து ராஜா, மனைவி அமுதாவைத் தாக்கியதில் அமுதாவுக்கு பலமான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. காயமடைந்த அமுதா இது குறித்து தனது பெரியம்மா மகன் காளியப்பனுக்குத் தகவல் அனுப்ப அவர் அமுதாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
இதை தவறாகப் புரிந்து கொண்ட ராஜா, காளியப்பன் தன் மனைவியைத் தன்னிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று விட்டதாகக் கோபமடைந்து காளியப்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மூன்று வயது மகன் ரோஸந்தை அழைத்துச் சென்று தன் வீட்டில் வைத்துப் பூட்டிக் கொண்டு கேஸ் சிலிண்டரைத் திறந்து விட்டு மனைவி அமுதாவை காளியப்பன் திரும்ப தன்னிடம் அனுப்பி வைக்கா விட்டால் சிலிண்டரைப் பற்ற வைத்து சிறுவனைக் கொன்று விடவிருப்பதாக மிரட்டினார். இது அப்பகுதி மக்களிடையே பரவி வாடமங்கலமே பதற்றதில் ஆழ்ந்தது.
தீயணைப்புத் துறையினருடன் விரைந்து வந்த அப்பகுதி காவல் ஆய்வாளர் செல்வராகவன் வீட்டுக்குள் பதுங்கி இருந்த ராஜாவிடம் தொடர்ந்து நான்கு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும் ராஜா மசியாத நிலையில் தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்துச் சென்று சிறுவனைக் காப்பாற்றினார்கள்.
உள்ளே இருந்த ராஜாவின் கையில் இருந்த லைட்டரைப் பிடுங்கி வீசி விட்டு திறந்து விடப்பட்டு நாற்றமெடுத்த சிலிண்டரை அப்படியே கொத்தாக அள்ளிச் சென்று அருகில் இருந்த வயல்வெளியில் வைத்து அப்புறப்படுத்திய பின் அப்பகுதி மக்களின் பதற்றம் ஒருவழியாக குறைந்தது.
சிறுவனைக் கடத்தி பணயக் கைதியாக வைத்துக் கொண்டு இப்படி மூர்க்கச் செயலில் ஈடுபட்ட ராஜா போலீஸாரிடம் பிடிபட்டதும் தன்னை மன்னித்து விட்டுவிடுமாறு மன்றாட ராஜாவிடம் பேச்சுக் கொடுத்து அவரை ஏமாற்றி போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் காவல்நிலையம் சென்ற போலீஸார் ராஜா மீது குழந்தைக் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
குடும்பத் தகராறு கடத்தல் மற்றும் கொலை முயற்சி வரை சென்றதை எண்ணி அப்பகுதி மக்கள் அதிர்ந்து போனார்கள்.