நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இந்தியப் படங்களுக்குத் தடை!

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இந்தியப் படங்களுக்குத் தடை!
Published on

பிரபல நடிகர் பிரபாஸ் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ‘ஆதிபுருஷ்.’ புராண காவியமான ராமாயணத்தின் ஒரு பகுதியை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஓம் ராவத் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இந்தப் படம் மட்டுமின்றி, அனைத்து இந்தியப் படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் ஸ்ரீராமனாகவும், நடிகை கீர்த்தி சனோன் ஜானகி (சீதை)யாகவும் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும், ‘சீதை இந்தியாவின் மகள்’ என்ற வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சர்ச்சைக்குரிய வசனத்தை அந்தப் படத்திலிருந்து நீக்கக் கோரி நேபாளத்தில் போராட்டமும் நடைபெற்றது.

இது குறித்து, நேபாளம் தலைநகர் காத்மாண்டுவின் மேயர் பாலேந்திர ஷா கூறும்போது, “ஆதிபுருஷ் படத்தில் ‘ஜானகி (சீதை) இந்தியாவின் மகள்’ என்று இடம்பெற்றிருக்கும் வசனத்தை நீக்க வேண்டும். நேபாளத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் திரையிடப்படும் அனைத்து இடங்களிலும் அந்த வசனம் நீக்கப்பட வேண்டும். காரணம், ஜானகி தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள ஜானக்பூர் என்ற பகுதியில் பிறந்தவர் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கும் பட்சத்தில், இப்படியொரு வசனம் இந்தப் படத்தில் இடம்பெற்றிருப்பதை ஏற்க முடியாது. எனவே, இந்த வசனத்தை நீக்கும் வரை காத்மாண்டுவில் இந்தப் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்.

அந்த வசனத்தை நீக்கக் கோரி பல நாட்கள் ஆன பிறகும் அந்தப் படத்திலிருந்து அது இன்னும் நீக்கப்படாததால் ஜூன் 19ம் தேதி (இன்று முதல்) காத்மாண்டுவில் எந்த இந்தியப் படமும் திரையிட அனுமதிக்கப்பட மாட்டாது’’ என்று கூறி இருக்கிறார். இதையடுத்து, நேபாளத்தின் சுற்றுலாத் தலமான போகரா பகுதியின் மேயர் தனராஜ் ஆச்சார்யாவும் இதே கருத்தை வலியுறுத்தி, ‘இன்று முதல் ஆதிபுருஷ் திரைப்படம் திரையிடப்படாது’ என்று தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com