ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது
தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து, அதை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் அந்த அவசர சட்ட மசோதாவை ஆளுநர் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன. ஆன்லைன் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அழுத்தம் பல தரப்பில் இருந்தும் கொடுக்கப்பட்டது.
கிடப்பில் போடப்பட்டிருந்த சட்ட மசோதா மீது விளக்கங்கள் கேட்டு ஆளுநர் மீண்டும் அரசுக்கே அனுப்பி வைத்திருந்தார். பிறகு அந்த சட்ட மசோதாவை தமழ்நாடு சட்டப்பேரவையின் மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சில நாட்கள் கழித்து அந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து தற்போது அந்த சட்டத்தைஅமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அதை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் ஆன்லைன் சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும்,நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வு முன்பு, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜராகி முறையீடு செய்தார். வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்து, மனு முறையாக இருந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும், இல்லாவிட்டால் வழக்கமான பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிவித்து உத்தரவிட்டனர்.