ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரிய வழக்கு ! உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைப்பு!
ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த, உச்சநீதிமன்றம் வேண்டுமானால் கூடுதல் விதிகளை வகுக்கலாம் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கின் விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் ஒரு பகுதி என வாதாடினார்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூடுதல் விதிகளை உருவாக்கலாம் என்றும், தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கலாச்சாரம் உள்ளதுபோல், தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டதாக எடுத்துக் கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த நடைமுறை மனிதர்களின் நன்மைக்கானது என எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பினர். எல்லா செயல்களிலும் ஏதோ ஒரு வகையில், உயிர்கள் பலியாவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் வாதாடப்பட்டது. விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலும் தடுக்க முடியாது என்றும், அசைவ பிரியர்களை கறி சாப்பிட கூடாது என விலங்குவதை தடுப்புச் சட்டத்தின் மூலம் தடுக்க முடியுமா? என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
விளையாட்டுக்கு முன் காளைகளுக்கு பரிசோதனை நடத்துவது போல், விளையாட்டுக்கு பின் ஏன் சோதனை நடத்துவதில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், ஜல்லிக்கட்டுக்கு பின்னால் காளைகளுக்கு சோதனை நடத்த அரசு தயாராக உள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
நேரடியாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் காளைகள் காயம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளதாக பீட்டா அமைப்பு தரப்பில் வாதாடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.