இந்தியாவில் பல்வேறு மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 32 மருந்து மாதிரிகள் தரமற்றவை என மத்திய மருந்து ஆய்வகங்கள் நடத்திய சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலை மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.
ஒவ்வொரு மாதமும் வழக்கமான ஆய்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தரமற்ற மற்றும் போலியான மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) அதன் இணையதளத்தில் வெளியிடுகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான சோதனையில், மத்திய மருந்து ஆய்வகங்கள் 32 மருந்து மாதிரிகளை 'தரமற்றவை' என கண்டறிந்துள்ளன. இதேபோல, மாநில மருந்து சோதனை ஆய்வகங்கள் 62 மாதிரிகளை அதே பிரிவில் கண்டறிந்துள்ளதாக ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒரு மருந்து மாதிரி தரமற்றது என அறிவிக்கப்படுவதற்கு, அது குறிப்பிட்ட தர அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்திருக்க வேண்டும். எனினும், அதிகாரிகள் இதுகுறித்து விளக்கமளிக்கையில், இந்த ஆய்வு முடிவுகள் குறிப்பிட்ட மருந்துத் தொகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சந்தையில் கிடைக்கும் மற்ற மருந்துகள் குறித்து எந்த கவலையும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாத சோதனையில், பீகார் மாநிலத்தில் 3 மருந்து மாதிரிகள் போலியானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் அங்கீகரிக்கப்படாத உற்பத்தியாளர்களால், வேறு ஒரு நிறுவனத்தின் பிராண்ட் பெயரைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தரமற்ற மற்றும் போலி மருந்துகளை அடையாளம் காணும் இந்த நடவடிக்கை, மாநில ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், தரமற்ற மருந்துகள் சந்தையில் இருந்து உடனடியாக அகற்றப்படுவதை உறுதி செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.