தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்து வருகிறார் செந்தில் பாலாஜி. இன்று அவரது தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். சென்னையில் இருக்கும் அவரது அரசு இல்லம் மற்றும் ஆர்.ஏ.புரம் இல்லங்களில் அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி உள்ளனர். இதுமட்டுமின்றி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்திலும் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்றது.
முன்னதாக, சென்ற வாரத்தில்தான் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பெரும்பாலான இடங்களில் வருமான வரித்துறை சோதனை சில நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியையே குறிவைத்து, அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘"எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மோடி அரசு அச்சுறுத்தி வருகிறது. விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிவிடலாம் என மோடி அரசு நினைக்கிறது" என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
அதேபோல், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்றிருக்கும் அமலாக்கத்துறையின் சோதனைக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவது நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.