கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி வழங்க கோரும் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை, மத்திய அரசு வரும் 17ஆம் தேதி பரிசீலித்து முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி வழங்குவது தொடர்பான விண்ணப்பத்தை அன்றைய தினம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிசீலிக்கவுள்ளது.
முன்னதாக, கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய அரசு, இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியது.
பேனா நினைவுச் சின்னம் தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை, பொதுமக்கள் கருத்து கேட்பு முடிவு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை அண்மையில் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்திருந்தது. அதனை பரிசீலித்து பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி கோரும் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு வரும் 17 ஆம் தேதி பரிசீலிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.