‘ஆட்சி அதிகார மாற்றத்துக்கும் செங்கோலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ பத்திரிகையாளர் என்.ராம்!

‘ஆட்சி அதிகார மாற்றத்துக்கும் செங்கோலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ பத்திரிகையாளர் என்.ராம்!
Updated on

சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பத்திரிகை செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த பத்திரிகையாளர் என்.ராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் பேசிய மூத்த பத்திரிகையாளர் என்.ராம், ‘‘செங்கோல் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் சொல்லப்படுகின்றன. இது சம்பந்தமான ஆய்வுகளின் மூலம் எதுவெல்லாம் நடக்கவில்லை என்பது குறித்தான முடிவுக்கு வர முடிகிறது. செங்கோல் குறித்த கட்டுக்கதைகளில் சில நடிகர்களை வைத்து நடித்து, அந்த வீடியோவை அரசு இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். ‘நேரு பிரதமராகப் போகிறார், அவரிடம் பதவியேற்பு விழாவை எப்படி நடத்த வேண்டும்’ என மவுன்ட்பேட்டன் கேட்டதாகக் கூறுகிறார்கள். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

மவுன்ட்பேட்டன் குறித்து பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. பலரும் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள். 1968ம் ஆண்டு கல்லூரி ஒன்றில் நடந்த மவுன்ட்பேட்டன் சொற்பொழிவில், நேருவிடம் பதவியேற்பு விழா குறித்து யாரும் கேட்டதாக எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. ஆதீனங்கள் நேருவைப் பார்த்தது உண்மை. அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதீனத்திடம் செங்கோல் தயாரிக்கச் சொன்னது உண்மை. அதை உம்மிடி பங்காரு செட்டி செய்தார் என்று இருக்கிறது. ஆனால், எப்போது, எதற்காக செங்கோல் கொடுத்தார்கள் என்ற விவரம் இல்லை. அதற்கும் அதிகார மாற்றம் என்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்கிறதா என்று கேட்டால், பதில் இல்லை என்பதுதான். ஓர் அரசிடமிருந்து மற்றோர் அரசுக்கு அதிகாரத்தை மாற்றும் சம்பவம்தான் அன்று நடந்தது. அதற்காக பிரிட்டிஷ் பார்லிமெண்டில் இந்திய சுதந்திரச் சட்டம் இயற்றப்பட்டது.

நேருவை இந்தியாவின் பிரதமராக மவுன்ட்பேட்டன் முன்மொழிந்ததும் இந்தியா சுதந்திர நாடாக மாறியது. மேலும், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காலை எட்டு மணிக்கு கராச்சிக்குச் செல்கிறார் என்றும், ஏழு மணிக்கு மீண்டும் விமானத்தில் இந்தியா திரும்புவார் என்றும்தான் மவுன்ட்பேட்டனின் அன்றைய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால், ‘13ம் தேதியே மவுன்ட்பேட்டன் கராச்சி செல்கிறார். எனவே, ஆதீனங்கள் மவுன்ட்பேட்டனைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆதீனங்களுக்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்தார்கள்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இந்து நாளிதழில் ஆகஸ்ட் 29, 1947 அன்று ஆதீனம் விளம்பரம் கொடுத்திருக்கிறார். அதில் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் நேருவுக்கு செங்கோல் கொடுத்ததாக மூன்று புகைப்படங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டு ஆதீனங்களை அழைத்து கெளரவப்படுத்தியதால் தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு எந்த அரசியல் ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை” என்று அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘‘நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் என்பது பெருமையான விஷயம் கிடையாது. மக்களாட்சியின் மாண்பே மன்னராட்சியை நீக்கியதுதான். அதன் பிறகு செங்கோல் என்பது மக்களால் ஒதுக்கப்பட்டது. ஆனால், மோடி மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வருவதற்கான அடையாளமாக செங்கோலை நிறுவி இருக்கிறார். இது ஏற்கத்தக்கது அல்ல’’ என்று பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com