முகச்சிதைவு நோய்க்கு சிகிச்சை பெற்று குணமான சிறுமிக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிய முதலமைச்சர்!

முகச்சிதைவு நோய்க்கு சிகிச்சை பெற்று குணமான சிறுமிக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிய முதலமைச்சர்!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கியம் தம்பதியினர். இவர்களின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் குணமாகாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து, சிகிச்சை அளிக்க அந்தச் சிறுமியின் பெற்றோரிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவுமாறு தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர், சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னை சவீதா மருத்துவக் கல்லூரியில் அந்தச் சிறுமிக்கு முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, கடந்த 29.8.2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். அதைத் தொடர்ந்து, மீண்டும் 8.2.2023 அன்று இரண்டாவது முறையாக முகச்சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியாவின் இல்லத்துக்கு நேரில் சென்று, அந்தச் சிறுமியை சந்தித்து நலம் விசாரித்ததோடு, அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்துத் தரப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று, சிறுமி டானியா குடும்பத்துக்கு திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்துக்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், ‘அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின்’ கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் மற்றும் சிறுமி டானியாவின் பெற்றோர் உடன் இருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com