கள்ளச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

கள்ளச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஏற்கனவே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தோரின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 14-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எ.வ.வேலு மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரும் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தனர்.

சாராய விற்பனையை தடுப்பு தொடர்பாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு, கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், விழுப்புரம் ஆட்சியர் பழனி, செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷரவன் குமார் ஜெகாவத், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி எஸ்.பி மோகன்ராஜ், செங்கல்பட்டு எஸ்.பி பிரதீப், கடலூர் எஸ்.பி ராஜாராம் ஆகியோருடன் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:

”எக்கியர்குப்பத்தில் விஷசாராயம் குடித்தவர்கள் ஜிப்மர், முண்டியம்பாக்கம் மருத்துவமனகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில் மெத்தனால் சாராயத்தினால் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதே போன்று துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு, தலா ரூ.10 லட்சம் வழங்கவும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொழிற்சாலைகளில் சாராயம் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இரு சம்பவமும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படும்”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com