செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் அதிரடி: ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதல்வர் பதிலடி!

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘செந்தில் பாலாஜி குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை உட்படுத்தப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல், அமைச்சராக இருப்பதால் அதிகாரதுஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு சாட்சிகளைக் கலைக்கும் வாய்ப்புள்ளது. பதவி நீக்கம் என்பது உடனடியாக நடமுறைக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கரூர் தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக பதவிவகித்துவந்தார். இந்தநிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.

அவரது உடல் நிலையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சைப் பரிந்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் வசம் இருந்த இரண்டு துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புக்கொள்ளவில்லை. அதனைத்தொடர்ந்து, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் இல்லை என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com