'ஸ்டாலின்' எனும் பெயரால் கிடைத்த பாஸிட்டிவ், நெகடிவ் அனுபவங்களைப் பகிர்ந்த முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Published on

இணைய ஊடகம் ஒன்றில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், நீயா? நானா? கோபி நாத்தும் சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் முதல்வரிடம், கோபிநாத் அவரது பர்ஸனல் வாழ்க்கை குறித்தும், முதல்வரின் மனைவி, பிள்ளைகள் குறித்தும் சுவாரஸ்யமாக பல கேள்விகளை முன் வைத்தார். அதில் சில பதில்கள் முன்னமே அனைவரும் அறிந்தவையே என்ற போதும், சில புதியவையாகவும் இருந்தன. அந்தக் கேள்விகளில் ஒன்று ஸ்டாலின் எனும் பெயரால் அவருக்கு கிடைத்த பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அனுபவங்களைக் குறித்ததாக இருந்தது.

அதற்கு முதல்வர் அளித்த பதில்;

பாஸிட்டிவ் அனுபவம்...

ரஷ்யாவின் புரட்சித் தலைவர் ஸ்டாலின், அவரது பெயரை தலைவர் எனக்கு வைத்திருந்தார். இந்தப் பெயரை வைத்ததால், ரஷ்யாவிலிருந்து பெரிய மனிதர்கள் அல்லது அதிகாரிகள் எவரேனும் அவரைச் சந்திக்க வரும் போது, பெருமையாக என்னை அழைத்து அவர்களிடம் என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்தி வைப்பார். அதை நான் பெருமையாக உணர்ந்திருக்கிறேன். தலைவருக்குமே அப்படிச் செய்வது பெருமிதமாக இருந்தது. என்று கூறினார்.

ஸ்டாலின் என்ற பெயரால் கிடைத்த நெகடிவ் அனுபவம்...

சர்ச் பார்க் கான்வெண்ட் இப்போது மகளிர் பள்ளியாக இருந்தாலும் அப்போது நாங்கள் பள்ளி செல்லும் வயதில் இருந்த போது அது இருபாலர் படிக்கும் பள்ளியாகவே இயங்கியது. வீட்டில் என்னையும், என் தங்கை தமிழ் செல்வியையும் அந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். தலைவரும் அப்படியே செய்யலாம் என்று முரசொலி மாறன் அவர்கள் மூலமாக எங்களை அந்தப் பள்ளியில் சேர்க்கச் சொல்லி அனுப்பினார்கள். அந்தப் பள்ளியில் என் பெயரால் குழப்பம் வந்து விட்டது. பள்ளியில் பெயர் சேர்க்கையின் போது என் பெயரைக் கேட்டதும் சற்று யோசித்தார்கள். இந்தப் பெயரால் ரஷ்யாவில் பெரிய கிளர்ச்சிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது இந்தப் பெயருடன் உள்ள மாணவரை நாங்கள் சேர்த்துக் கொண்டால் அது பிரச்சனையில் முடியும். எனவே நீங்கள் வேண்டுமானால் பெயரை மாற்றித் தாருங்கள், நாங்கள் எங்கள் பள்ளியில் அட்மிஸன் தருகிறோம் என்றார்கள்.

இதை மாறன், தலைவரிடம் தெரியப்படுத்தினார். “பெயரை மாற்றுவதா? நான் பள்ளியை வேண்டுமானால் மாற்றுவேனே தவிர, இந்தப் பெயரை மட்டும் மாற்றவே மாட்டேன். இதில் மறுபரிசீலனையே கிடையாது” - என்று விட்டார் கலைஞர்.

பிறகு நானும் என் தங்கையும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் சேர்ந்து தமிழ் மீடியத்தில் படித்தோம். அதன் பிறகு சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்குச் சொந்தமான பள்ளியில் நான் பியூசி வரையிலும் படித்தேன்.

என்று தெரிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

சிலர் பொதுவில் பேசும்போது ஊரென்ன செய்யும்? பெயரென்ன செய்யும்? என்பார்கள். இதோ முதல்வரின் வாழ்க்கையில் பெயர் என்னவெல்லாம் செய்திருக்கிறது என்று பாருங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com