திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தென்முடியனூர் கிராமத்தில் உள்ளது முத்துமாரியம்மன் கோயில். இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் பட்டியலின மக்களுக்கு சாமியை தரிசனம் செய்ய கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர்கள் பலமுறை ஆட்சியரிடம் மனு கொடுத்தும், போராட்டங்கள் பல நடத்தியும் இதற்குத் தீர்வு காணப்படாமல் இருந்தது.
இதுகுறித்து அண்மையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில் முடியனூர் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபட அனுமதிக்குமாறு கோரப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து பட்டியலின மக்களும் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அனுமதி வழங்கினார். அதைத் தொடர்ந்து காவல் துறையினரின் பாதுகாப்போடு பட்டியலின மக்கள் இன்று முத்துமாரியம்மன் கோயிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த உயர் சாதியினர் கடும் எதிர்ப்பு காட்டி வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊர் மக்களுடன் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் தென்முடியனூர் முத்துமாரியம்மன் கோயில் அருகே குவிக்கப்பட்டனர். பட்டியலின மக்கள் உள்ளே வரக்கூடாது என்பதற்காக கோயில் கதவு பூட்டு போடப்பட்டு இருந்தது. உயர் சாதியினரின் இந்தக் கடும் எதிர்ப்பைத் தாண்டி பலத்த போலீஸ் பாதுகாப்போடு பல தலைமுறைகளாக கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த பட்டியலின மக்களை கோயில் பூட்டை உடைத்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கோயிலுக்குள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தார்.
தலைமுறை தலைமுறையாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் குறையோடு இருந்த பட்டியலிய மக்களுக்கு இந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது. சாமி தரிசனத்துக்குப் பிறகு பேசிய மாவட்ட ஆட்சியர், “இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான எந்தக் கோயிலையும் தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது. கோயில்கள் அனைவருக்கும் பொதுவானவை. அதனால் இந்தக் கோயிலில் பட்டியலின மக்கள் சாமியை வழிபாட யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.