வடிவேலு பட பாணியில் 'செல்போன் டவரை காணோம்" புகார் தந்த நிறுவனம்!

வடிவேலு பட பாணியில்  'செல்போன் டவரை காணோம்" புகார் தந்த நிறுவனம்!
Published on

சென்னை கோயம்பேடு பகுதியில் செல்போன் டவரை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோயம்பேடு வடக்கு மாட வீதி தெருவை சேர்ந்தவர்கள் சந்திரன், கருணாகரன் மற்றும் பாலகிருஷ்ணன். இவர்களுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2006ம் ஆண்டு ஏர்செல் செல்போன் டவர் அமைத்தனர். கடந்த மாதம் 19ம் தேதி, ஏர்செல் நிறுவனத்தில் இருந்து டவரை பார்வையிட்டு சென்றுள்ளனர். இதன்பிறகு மறுபடியும் வந்து பார்த்தபோது ஏர்செல் டவர் காணாமல் போனது பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வடிவேலு பட பாணியில் 'கிணத்தை காணோம்' என்பது போல் "டவரை காணோம்" என ஏர்செல் நிறுவன மேலாளர் புலம்பிய படி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஏர்செல் நிறுவன மேலாளர் கிருஷ்ணமூர்த்தி(47) கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஏர்செல் செல்போன் டவர் இல்லாமல் போனது தெரியவந்தது.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செல்போன் டவர் வைக்க அனுமதி கொடுத்திருந்த வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்த விசாரணையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏர்செல் செல்போன் சேவை மூடப்பட்டதால் கடந்த 6 வருடங்களாக வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். அந்த கோபத்தில் தங்களுக்கு செல்போன் நிறுவனம் சரியாக வாடகை பணம் தராததால் அவர்கள் வைத்த பல அடி உயரமுள்ள செல்போன் டவரை காயலான் கடைக்கு போட்டுள்ளனர் வீட்டு உரிமையாளர்கள்.

"செல்போன் டவரை காணோம்" என்கிற புகாரோடு அது தொடர்பாக நடைபெற்றிருக்கும் இந்த பரபர சம்பவத்தை கேள்விப்பட்டு போலீஸாருக்கே தலை "கிர்" ரென சுற்றிக் கொண்டிருக்கிறதாம். இதுவரை எத்தனையோ கேஸ்களை பார்த்த தமிழ்நாட்டு போலீஸாரே இந்த கேஸை எப்படி டீல் செய்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com