உட்கட்சிப் பூசலை மறந்து உயிர்த்தெழும் காங்கிரஸ் காரியக்கமிட்டி - நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

ராகுல் காந்தியின் பாதயாத்திரை, மக்கள் மத்தியில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் பலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், அது மிகுந்த மன வருத்தத்தில் இருந்த காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

பாத யாத்திரை தவிர இன்னொரு முக்கியமான நிகழ்வும் சென்ற ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் எந்தவொரு கோஷ்டி மோதலும் இல்லாமல் நடந்து முடிந்தது. காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தல்தான் அது. இதுவரை காங்கிரஸ் தலைமையால் நியமிக்கப்பட்ட தலைவர்கள்தான் அதிகம். ஆனால், இம்முறை முற்றிலும் புதுசு.

யாரை தலைவராக போட்டியிட வைப்பதில் என்பதில் சர்ச்சைகள் இருந்தாலும், மல்லிகார்ஜீன கார்கேதான் காங்கிரஸ் தலைமையின் தேர்வு என்றதும் காட்சிகள் மாறிவிட்டன. எந்தவித மோதலும் இல்லாமல் அதிகபட்ச காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவோடு கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இதயமான காரியக்கமிட்டியை தூசு தட்டும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. காங்கிரஸ் காரியக்கமிட்டி, நாடு முழுவதும் உள்ள இரண்டாம் கட்ட காங்கிரஸ் தலைவர்களை அடையாளப்படுத்தும். ஆனால், ஜி 23 என்னும் தலைமை மீதான அதிருப்தி குழு உருவானதும் காரியக்கமிட்டியின் வலுவிழந்து போய்விட்டது.

காங்கிரஸ் காரியக்கமிட்டிக்கு தேர்தல் நடத்துவதற்கு மேலிடம் முடிவு செய்திருக்கிறது. கடைசியாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் சீதாராம் கேசரி தலைவராக இருந்தபோது தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2004 வரை காங்கிரஸ் தடுமாறிக்கொண்டிருந்தது.

ஒருவழியாக 2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் காரியக் கமிட்டி செயலிழந்துவிட்டது. அனைத்தையும் காங்கிரஸ் மேலிடமே முடிவு செய்தன. இந்நிலையில் பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சிக்குப்பின்னர் எழுந்துள்ள அரசியல் சூழலை பயன்படுத்தி, காங்கிரஸ் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி பதவி அளிக்க மேலிடம் முடிவு செய்திருக்கிறது.

காங்கிரஸ் காரியக் கமிட்டியை மாற்றியமைப்பது என்பது சவாலான விஷயம். இன்றைய நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்ட அளவில் கூட கோஷ்டிப் பூசல் உண்டு. ஒவ்வொரு மாவட்ட கமிட்டியிலும் குறைந்தபட்சம் இருவேறு அதிகார பலமுள்ள நிர்வாககள் தொடர்ந்து மோதலில் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோஷ்டிப் பூசல் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்தினால், யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் கடுமையான போட்டி உண்டாகும். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில உள்கட்சி பிரச்னை எழுந்தால், அது கட்சியின் இமேஜை பாதிக்கும். ஆகவே, காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடைபெற சாத்தியமில்லை. ஆனால், கூடுதலாக ஆட்களை நியமிக்க வாய்ப்பு உண்டு என்கிறது டெல்லி வட்டாரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com