காஞ்சிபுரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் குறைந்த விலையில் மஞ்சப்பை வழங்கிடும் தானியங்கி இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்கிடும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்தும் வகையில், மீண்டும் மஞ்சள் பை பயன்பாட்டினை கொண்டுவர பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 ரூபாய்க்கு மஞ்சள் பைகளை வழங்கிடும் இயந்திரங்களை அமைத்து வருகின்றனர்.
பத்து ரூபாய் செலுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு இயந்திரத்தின் மூலம் தானாகவே மஞ்சப்பை வழங்கப்படும்.இந்த இயந்திரத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மக்களை உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு இறைவனை தரிசிக்க வரும் பக்தர்கள் தாங்கள் பயன்படுத்தும் மக்கா தன்மை கொண்ட பொருட்களை ஆங்காங்கே விட்டுச் செல்கின்றனர்.இதனால் அங்காங்கே குப்பைகள் தேங்கி அசிங்கமாக தெரிவதுடன்,வாயில்லா ஜீவன்கள் அவற்றை உண்டு இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதனை தவிர்க்கும் விதமாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில்,வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆகிய இரண்டு இடங்களில் மலிவு விலையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, துணை ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கு.பிரகாஷ் மற்றும் மாசுக்கட்டுப்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.