ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாகியிடம் இருந்து 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல்!

ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாகியிடம் இருந்து 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல்!
Published on

ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாகியிடம் இருந்து 90 மூட்டை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது.

ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி உள்ளிட்ட 11 பேர் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசாரால் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்களும் கண்டறியப்பட்டன.

அதேபோல அண்மையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஹரீஷையும் 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆருத்ரா மோசடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் தொடர்பு குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாகி சந்திராகாந்திடம் தொடர்ந்து ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மட்டுமல்லாமல், பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் மத்திய விசாரணை அமைப்புகளும் தங்களது விசாரணையை துவங்கியுள்ளன. இந்த வழக்கில் கிட்டத்தட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக இன்னும் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாகியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், சந்திரகாந்தின் 3 கோடி ரூபாய் வங்கி கணக்கை முடக்கியதாகவும் அவரிடம் ஆருத்ரா நிறுவனத்தின் பணபரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆருத்ரா நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகி ராஜா செந்தாமதரை என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com