அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட வழக்கின் ஆதாரங்கள் தினந்தோறும் அழிக்கப்பட்டு வருவதாகவும், அவரை உடனே விசாரணை செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்குமாறும் மத்திய அமலாக்கத்துறை, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
2015 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது பணியிட நியமனங்களுக்கு லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கின் காரணமாக சென்ற மாதம் அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அமலாக்கத்துறை சம்மனை வாங்க மறுத்த செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் செந்தில் பாலாஜியை மீண்டும் விசாரணை செய்ய உத்திரவிடுமாறு மத்திய அமலாக்கத்துறை, உச்சநீதிமன்றத்தை கேட்டுக் கொண்டிருக்கிறது.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவரது காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நெஞ்சு வலி இருப்பதாக அவர் கூறியதையெடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து தங்கி, சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதிக்கும்படி அதில் கோரப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது குறித்து பேசிய அமலாக்கத்துறையின் பிரநிதிநிதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தினந்தோறும் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் அரசியலில் செல்வாக்கு மிக்கவரிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டிய தேவை இருப்பதாகவும், இல்லையென்றால் வழக்கு நீர்த்து போக வாய்ப்பு இருப்பதாகவும குறிப்பிடப்பட்டுள்ளது. செ
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. மருத்துவமனையிலிருந்து எப்போது வீடு திரும்புவார் என்பது கேள்விக்குறியாக இருப்பதால் தன்னால் உரிய கடமையை செய்ய முடியவில்லை என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலம் தொடங்கி பல்வேறு விஷயங்களில் அமலாக்கத்துறை தடைக்கல்லாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு மருத்துவர்களின் அறிக்கை மட்டும் போதாது, மத்திய அரசின் சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகளும் அவரது உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டிருந்தது. செந்தில் பாலாஜி விஷயத்தில் அமலாக்கத்துறை எழுப்பும் பல்வேறு சந்தேகங்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருவது என்னவோ உண்மைதான்.