திப்பு சுல்தான் காலத்தில் துவங்கிய புகழ்பெற்ற அந்தியூர் குதிரை சந்தை!

திப்பு சுல்தான் காலத்தில் துவங்கிய புகழ்பெற்ற அந்தியூர் குதிரை சந்தை!
Published on

மிழகம் மட்டுமல்ல, உலகின் அனைத்து நகரங்களிலும் அந்தந்த பகுதிகளில் சிறப்பாக விளங்கும் பொருள்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய சந்தைகள் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் நம் தமிழகத்தில் சுமார் 200 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் ஆர்வம் குறையாமல் குதிரை மற்றும் கால்நடைப் பிரியர்கள் அனைவரும் கண்டுகளிக்கவும் வாங்கி மகிழவும் வைக்கிறது அந்தியூர் சந்தை. ஆம்... குதிரை நடனமாடினால் ஆச்சர்யமானதுதானே?
     ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோயிலின் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நான்கு நாட்கள் கொண்டாடப்படும். அப்படி நடைபெறும் திருவிழா காலத்தில் கோயில் அருகே குதிரை சந்தை  நடத்தப் படுவது வழக்கம்.

   சுமார் 200 ஆண்டுகளாக அன்றும் இன்றும் புகழ்பெற்று விளங்கும் அந்தியூர் குதிரை சந்தை மாவீரன் திப்பு சுல்தான் காலத்தில் துவங்கப்பட்டதாக கூறப்படுகிறது புகழ் பெற்ற இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை உள்பட பல பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் தங்கள் குதிரைகளை விற்பனைக்காகவும் அவற்றின் தனித்திறமையை மக்களுக்குக் காட்டவும் கொண்டு வந்தனர். இவ்வளவு சிறப்பு பெற்ற அந்தியூர் குதிரை சந்தை இந்த ஆண்டும் கோலாகலமாக துவங்கியது.

     அந்தியூர்  குதிரை சந்தையில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்வது நடனமாடும் குதிரைகள்தான். குதிரைகள் தாளத்திற்கு ஏற்ப கால்களை அசைத்து நடனம் ஆடுவதும் முன்னங்கால்களை உயரே தூக்கிக்கொண்டு பின்னங்கால்களை தரையில் ஊன்றி  தாளத்துக்கு ஏற்ப ஆடுவதும் வியக்க வைக்கிறது. தற்போது கட்டிலில் ஏறியும் ஆடி அசத்துவது சிறப்பு.

இந்த நடனக் குதிரைகளை பல வருடங்களாக அழைத்து வரும் மேலவாணியை சேர்ந்த தேசகுமார் என்பவர் கூறியது. “இந்தியாவில் பெரிய குதிரை சந்தை புஷ்கரில் கூடும்... தென்னிந்திய அளவில் என்றால் அது அந்தியூரில் கூடும் சந்தைதான். 4 நாட்கள் நடைபெறும் இந்த சந்தையில் இந்தியாவின் முக்கியப்பகுதிகளில் இருந்து குதிரை வியாபாரிகளும் குதிரை ஆர்வலர்களும் வருவார்கள். குதிரைகளில் கம்பீரமாக காட்சியளிப்பது குஜராத்தை சேர்ந்த  கத்தியவார் இனமும்  ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வார் இனக் குதிரையும்தான். என்னிடம் தற்போது இருக்கும் இந்த நடனமாடும் குதிரை கத்தியவார் – மார்வார் குதிரைகளின் கலப்பு இனமாகும். இசைக்கும் தாளத்துக்கும் ஏற்ப ஆடுவதற்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து உள்ளேன். இதற்கு பல லட்சங்கள் விலை இருந்தாலும் இன்னும் நான் விலை ஏதும் கூறவில்லை” என்றார். மிக அதிக அழகும் கம்பீரமும் கொண்ட இந்த ஆடும் குதிரைக்கு தற்போது ஆறு வயதாகிறது. தற்போது, 25 லட்சம் ரூபாய் மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

அந்தியூர் சந்தையில் குதிரைகள் மட்டுமல்ல நாட்டு இன மாடுகளும் இடம்பெற்று பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. கருப்பும் வெள்ளை நிறமும் கொண்ட  எட்டு வயதான காங்கேயம் இன மயிலைக்காளையின் கம்பீரம்  இங்கு வரும் அனைவரையும் கவர்கிறது. இதற்கு ஒன்றரை லட்சம் விலை நிர்ணயித்து உள்ளனர்.

  வாயில்லா ஜீவன்களைப் பராமரித்து இது போன்ற இடங்களுக்கு அழைத்து வந்து அதன் திறமையைக் காட்டுவது நம் கலாச்சார சிறப்பாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com