கார் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி முதியவரிடம் 12 லட்சத்தை சுருட்டிய கும்பல்.

கார் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி முதியவரிடம் 12 லட்சத்தை சுருட்டிய கும்பல்.

கோவையைச் சேர்ந்த முதியவருக்கு 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாகக் கிடைத்திருப்பதாகக் கூறி, அவரிடமிருந்த 12 லட்சத்தை மர்ம நபர்கள் சுருட்டியுள்ளனர். 

கற்பனைக்குக் கூட எட்டாத வகையில் மோசடிகள் நடக்கும் இடம் சைபர் ஸ்பேஸ். அதில் ஈடுபட முயலும் நபர்களின் இலக்குக்கு ஆளாகிறவர்கள் அதிக ஆசைப்படும் நபர்களே. அப்படி ஒரு முதியவர் தனக்கு பம்பர் பரிசு அடித்ததாக சொன்ன ஆன்லைன் ஆசாமிகளிடம், 12 லட்சத்தை பறிகொடுத்து பரிதவிக்கிறார். கோவையைச் சேர்ந்த அபு சமத் என்பவரே பாதிக்கப்பட்டவர். 60 வயதான இவர் ஒரு கடையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். தனது சிறு சொத்து ஒன்றை விற்று வீட்டில் பணம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு இவர் ஆன்லைனில் காய் வெட்டும் கருவி ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். அது டெலிவரி ஆனவுடன் முதியவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நீங்கள் அதிர்ஷ்டக்கார வாடிக்கையாளர், உங்களுக்கு கார் பரிசு விழுந்திருப்பதாக ஆசை காட்டியுள்ளார். அதை முதியவர் நம்பிவிட்டார். காரை டெலிவரி செய்ய சில அவர்கள் நிபந்தனைகளை விதித்துள்ளனர். காருக்கான ரெஜிஸ்ட்ரேஷன், இன்சூரன்ஸ் பணிகளுக்கு பணம் கட்ட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி முதியவர் மர்ம நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி கார் வந்து சேரவில்லை. சந்தேகம் அடைந்த முதியவர் மீண்டும் போன் செய்து விசாரித்தபோது, கார் டெலிவரி ஆகிவிட்டது, ஆன் தி வேயில் கார் இருப்பதாகக் கூறியுள்ளனர். 

காரை எதிர்நோக்கிக் காத்திருந்த முதியவருக்கு அடுத்து வந்த அழைப்பில், கார் விபத்தில் சிக்கிவிட்டது. எனவே சரியான நேரத்தில் டெலிவரி செய்ய முடியவில்லை. காரை ரிப்பேர் செய்ய பணம் கட்டும்படி கேட்டுள்ளனர். அதற்கு முதியவர் உடன்படவில்லை. இரண்டு மாதம் கழித்து மீண்டும் முதியவரை அழைத்த மற்றொரு நபர், உங்களுக்கு காரை அனுப்புவது நிலுவையில் இருக்கிறது. அதை நான் முடித்துத் தருகிறேன். புதிய கார் அல்லது அதன் மதிப்புத் தொகையான 38 லட்சம் ரூபாயை பெற்றுத் தருகிறேன் எனக் கூறியுள்ளார். அதை நம்பிய முதியவர் அந்த மர்ம நபர் கூறியபடியே மீண்டும் பணத்தை அனுப்பியுள்ளார்.

தனது சொத்தை விற்று வைத்திருந்த பணத்தத் தவிர தனது குடும்பத்தாரிடமும் கடன் பெற்று அனுப்பியுள்ளார். ஒட்டுமொத்தமாக 155 தவணைகளில் பணத்தைக் கரந்த கும்பல், கடைசி வரை காரை கண்ணில் காட்டவில்லை. பின்னர் வேறு ஒரு நபரிடம் காருக்காக கடன் கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் எவ்வாறெல்லாம் பணம் பெற்றார்கள் என்பதை விளக்கியபோது தான், அவரை மோசடி கும்பல் ஏமாற்றியிருப்பதை அறிந்தார். 

பின்னர் அதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் அபு சமத் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு லாட்டரியில் கோடிக் கணக்கில் பரிசு, வாரிசு இல்லாத சொத்துக்கு நீங்களே அதிபதி என பல்வேறு வழிகளில் மோசடிகளை அரங்கேற்றும் ஆசாமிகள்தான், முதியவருக்கு கார் பரிசாகக் கிடைத்திருப்பதாக ஆசை காட்டி கைவரிசை காட்டியுள்ளனர். 

முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் இதுபோன்ற ஆசையைத் தூண்டும் வாக்குறுதிகளை நம்பி, பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com