பளபளக்கும் பத்மநாபபுரம் அரண்மனை!

பளபளக்கும் பத்மநாபபுரம் அரண்மனை!
Published on

ன்னியாகுமரி மாவட்டம், தக்கலைக்கு அருகில் பத்மநாபபுரத்தில் உள்ளது கல்குளம் அரண்மனை. திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குச் சொந்தமான அரண்மனை என்பதால், இது கேரளா அரசின் கட்டுபாட்டில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி, வேளி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அரண்மனையைச் சுற்றி கருங்கற்களால் ஆன கோட்டை சுவர் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த ரவிவர்ம குலசேகர பெருமாள் என்பவரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. ஆனாலும், இந்த அரண்மனையின் முகப்பில் இருக்கும், ‘தாய் கொட்டாரம்’ என்ற பகுதி மட்டுமே அவரால் கட்டப்பட்டதாகும். பிற பகுதிகள் அவருக்குப் பின்பு அதிகாரத்துக்கு வந்தவர்களால் விரிவுபடுத்தப்பட்டது.

கேரளக் கட்டட பாணியில் காட்சி தரும் இந்த அரண்மனையில் சீன பாணியிலான சிம்மாசனமும் பெரிய அன்னதானக்கூடம் ஒன்றும் உள்ளது. இந்தக் கூடத்தில் ஒரே நேரத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் அமர்ந்து உணவு அருந்தலாம். மேலும், இந்த அன்னதானக் கூடத்தில் உணவுப் பொருட்களை வைத்துப் பயன்படுத்த சீன சாடிகள் வைக்கப்பட்டுள்ளது ஆச்சரியம். பூமுகம் (நுழைவு மண்டபம்), மந்திர சாலை (அவை மண்டபம்), மணிமேடை (மணிக்கூண்டு), நாடக சாலை (கதகளி நடனம் ஆடும் இடம்), ஊத்துபுரம் (உணவுக் கூடம்), தாய்க் கொட்டாரம், உப்பரிகை மாளிகை (அடுக்கு மாளிகை), கண்ணாடி தளம், நவராத்திரி மண்டபம், இந்திர விலாசம் மற்றும் சந்திர விலாசம் எனப் பல பகுதிகளைக் கொண்டு இந்த அரண்மனை விஸ்தாரமாக விளங்குகிறது.

ஆறரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த அரண்மனை இது. ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கியது. இந்த அரண்மனையில் ஸ்ரீ நீலகண்டர், ஸ்ரீராமர், ஸ்ரீமுருகன், ஸ்ரீசரஸ்வதி ஆகியோருக்குக் கோயில்கள் அமைந்துள்ளன. இவை தவிர, இந்த அரண்மனையில் சிறியதும் பெரியதுமாக 14 உப அரண்மனைகளும் உள்ளன. மர வேலைப்பாடுகளால் பிரமிக்கச் செய்யும் இந்த 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரண்மனையின் தரை மற்றும் சுவர் பகுதிகள், முட்டையின் வெள்ளைக்கரு, தேங்காய் எண்ணெய், சில மூலிகைச் சாறுகள் கலந்து பூசப்பட்டு பளபளப்பு குறையாமல் இன்றும் காட்சி தருவது வியப்பு.

இந்த அரண்மனை நவராத்திரி மண்டபத்தில் விழாக் காலங்களில் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசர்கள் மண்டபத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு களிப்பர். அரச மகளிர், மண்டபத்தை ஒட்டியுள்ள அறைகளில் அமர்ந்து, விசேஷமாக அமைக்கப்பட்டுள்ள மரத் துளைகளின் வழியே நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பர். இதில் விசேஷம் என்னவென்றால், அரச மகளிரால் மண்டபத்தில் அமர்ந்திருப்பவர்களைக் காண முடியும். ஆனால், மண்டபத்தில் அமர்ந்திருப்பவர்களால் அரச மகளிரைக் காண முடியாது என்பதுதான். இந்த அற்புத அரண்மனை கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவிலும் தக்கலையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com