கர்நாடகத்தில் 20 மக்களவை தொகுதிகளை வெல்வதே இலக்கு: சித்தராமையா!

கர்நாடகத்தில் 20 மக்களவை தொகுதிகளை வெல்வதே இலக்கு: சித்தராமையா!

கர்நாடகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் 20 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்பதே இலக்கு என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா கூறுகையில், கர்நாடக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய பொறுப்பு உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற உழைக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி கட்சித் தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா காந்திக்கு பெருமை சேர்த்துள்ளோம். அதேபோல மக்களவைத் தேர்தலிலும் கணிசமான தொகுதிகளில் வென்று தலைவர்களுக்கு பரிசாக வழங்க வேண்டும். அமைச்சர்கள் இந்த இலக்கை உணர்ந்து, பொறுப்புடன் செயலாற்றினாலே இது சாத்தியம் என்றும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

முதலில் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளா நாம் நிறைவேற்ற வேண்டும். சென்ற முறை ஆளுங்கட்சி செய்த தவறுகளை நாமும் செய்யக்கூடாது. நேர்மையாகவும், பொறுப்புணர்வுடனும் அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி என்ற முறையில் நாம் நடத்திய போராட்டங்களினால்தான் மக்கள் பா.ஜ.க.வை நிராகரித்துவிட்டு நம்மிடம் ஆட்சிப் பொறுப்பு கொடுத்துள்லனர்.

எனவே நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மக்கள் குறைகளை காதுகொடுத்து கேட்க வேண்டும். அவர்களது

பிரச்னையை தீர்த்துவைக்க வேண்டும். பெரும்பான்மையுடன் நாம் வெற்றிபெற்றிருக்கிறோம் என்றால் பொறுப்பும் நமக்கு அதிகரித்துள்ளது என்று அர்த்தமாகும். மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்பட நாம் செயல்பட வேண்டும்.

சிறு சிறு பிரச்னைகளை நீங்களே தீர்த்து வைக்க வேண்டும். மக்கள் தங்களை பிரச்னைக்காக சட்டப்பேரவை நோக்கி வரும் நிலைக்கு தள்ளக்கூடாது. மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டால்தான் வரும் மக்களவைத் தேர்தலில் நாம் கணிசமான வெற்றியைப் பெற முடியும் என்றார் முதல்வர் சித்தராமையா.

கர்நாடகத்தின் மூலம் மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு முடிவுகட்ட வேண்டும். இதை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com