விசாரணை அமைப்புகளை அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

விசாரணை அமைப்புகளை அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
Published on

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மத்திய விசாரணை அமைப்புகளை தனது அதிகாரத்தின் மூலம் தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை பழிவாங்கி வருவதாக கூறி குற்றஞ்சாட்டி 14 அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தனிநபர் மீது அல்லது கூட்டாக ஒரு சிலர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் நீங்கள் எங்களை அணுகலாம். ஆனால், வழக்கின் உண்மைத் தன்மை தெரியாமல் பொத்தாம் பொதுவாக விதிகளை ஏற்படுத்தி விசாரணை நடத்துவது ஆபத்தானது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரீய ஜனதாதளம், பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு), ஐக்கிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், உள்ளிட்ட 14 கட்சிகள் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக்மனு சிங்வி இது தொடர்பான மனுவை தாக்கல் செய்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டது, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தில்லி முன்னாள் துணைவருமான மணீஷ் சிசோடியா கைது இவற்றின் எதிரொலியாக எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தன.

2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் தலைவர்கள் மீது மத்திய புலனாய்வுத்துறையும், அமலாக்கத்துறையும் பதிவு செய்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகள் எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், 23 சதவீத வழக்குகளிலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை  போட்டுள்ள வழக்குகளில் 95 சதவீதம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்டவையாகும். இது பழிவாங்கும் நடவடிக்கையே என்பது தெளிவாகத் தெரிகிறது என்று சிங்வி வாதாடினார்.

எனினும் இந்த மனுவை விசாரித்த தலைமைநீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மனுவின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் இருப்பதாக்க் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்கிறீர்களா, அவர்களுக்கு குடிமக்கள் என்ற முறையில் சிறப்புச்சலுகை ஏதும் இருக்கிறதா என்று சிங்வியிடம் அவர் கேட்டார்

பொதுமக்களைக் காட்டிலும் அரசியல் தலைவர்களுக்கு அதிகமான சட்டப்பாதுகாப்பு வரையறக்கப்படவில்லை. சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறபோது எந்தவித சட்டப் பாதுகாப்பும் இல்லாமல் வரும் பொதுமக்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அரசியல் தலைவர்களை கைது செய்ய வேண்டும் என்று எப்படிக் கூறமுடியும்? என்று கேட்டார்.

உடனே மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, நான் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றோ அல்லது விதிவிலக்கு வேண்டும் என்றோ கேட்கவில்லை. சட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். விசாரணை நியாயமாக இருக்க வேண்டும் என்றுதான் கோருகிறேன் என்றார். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த மத்திய அரசு, விசாரணை அமைப் புகளை பயன்படுத்துகிறது. மேலும் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர் என்பதுதான் எனது குற்றச் சாட்டாகும் என்றார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், தனிநபர் மீது அல்லது கூட்டாக ஒரு சிலர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் நீங்கள் எங்களை அணுகலாம். ஆனால், வழக்கின் உண்மைத் தன்மை தெரியாமல் பொத்தாம் பொதுவாக விதிகளை ஏற்படுத்தி விசாரணை நடத்துவது ஆபத்தானது என்று குறிப்பிட்டார். அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஒரே சட்டம்தான் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த மனுவை திரும்பப் பெற நீதிபதிகளிடம் அனுமதி கோரினார். இதைத் தொடர்ந்து மனு திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com