100 ட்ரில்லியன் டாலர்களைத் தாண்டிய உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி. இந்தியாவின் நிலை ?

100 ட்ரில்லியன் டாலர்களைத் தாண்டிய உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி. இந்தியாவின் நிலை ?
Published on

IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் ஜிடிபி தரவுகளை வெளியிட்டது. அதன்படி உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022 ஆம் ஆண்டில் 100 ட்ரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது தெரியவந்தது. 

ஒருபுறம் இந்தியா பல நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதல் ஐந்து இடத்திற்குள் முன்னேறி வரும் வேளையில், சீனாவும் அதிரடியாக வளர்ச்சியடைந்து அமெரிக்காவுடன் போட்டி போட முயல்கிறது. தற்போது இந்த நூறு ட்ரில்லியன் டாலர் ஜிடிபி-ல் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய போட்டியாகவே இருக்கிறது. 

2000 ஆவது ஆண்டின் துவக்கத்தில், உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 34 ட்ரில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இந்த நிலை கடந்த 20 வருடத்தில் உலக நாடுகளின் மொத்த ஜிடிபி மூன்று மடங்காகி அசுர வளர்ச்சியடைந்தது வியக்க வைக்கிறது. இதை வர்த்தகத் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கின்றனர். 

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதாவது கொரோனாவுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு, மொத்த உலக நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி 87 ட்ரில்லியன் டாலராக இருந்தது. கொரோனா காலத்தில் இது சரிவைச் சந்தித்தாலும், அந்த சரிவை சமாளித்து தற்போது மீண்டு வந்ததே மிகப்பெரிய சுமையாக இருந்தது எனலாம். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, 88 ட்ரில்லியன் சர்வதேச ஜிடிபியில், 21.38 டிரில்லியன் டாலரை அமெரிக்காவும், 14.34 ட்ரில்லியன் டாலரை சீனாவும், இந்தியா 2.84 ட்ரில்லியன் டாலரையும் பங்கீடாகக் கொண்டிருந்தது. 

இந்நிலையில், அடுத்த மூன்று வருடத்திற்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25.46 ட்ரில்லியன் டாலராகவும், சீனா 18.1 டிரில்லியன் டாலராகவும், இந்தியா 3.39 ட்ரில்லியன் டாலராகவும் ஜிடிபி வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது, மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவின் ஜிடிபி சுமார் 4 ட்ரில்லியன் டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. அதேபோல சீனாவின் ஜிடிபி 3.76 ட்ரில்லியன் டாலர் அளவிலான வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வெறும் 0.55 ட்ரில்லியன் டாலர்கள் மட்டுமே. 

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், வெறும் மூன்றே ஆண்டுகளில் அமெரிக்காவும் சீனாவும், தனது பொருளாதாரத்தில் ஒரு புதிய இந்தியாவையே உருவாக்கி விட்டது எனலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com