உலக வங்கியின் தலைவரான இந்தியர்!

உலக வங்கியின் தலைவரான இந்தியர்!

உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்தியரான அஜய் பால்சிங் பங்கா போட்டியின்று தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா விண்ணப்பித்தபோது, போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிடம்வரை யாரும் அஜய் பால்சிங் பங்காவை எதிர்த்து போட்டியிடாததால் உலக வங்கி தலைவராக அஜய் பால்சிங் பங்கா ஒருமனதாக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு உலக வங்கி குழுமத்தின் தலைவராக கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்றிருந்த டேவிட் மால்பாஸ் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. ஆனாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக முன்கூட்டியே அவர் தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் கடந்த மூன்று மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன.

புதிய தலைவர் நியமனம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல கட்டங்களில் ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தார். இறுதியாக சர்வதேச நிதி நிறுவனமான 'மாஸ்டர் கார்டு' நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.,வும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பால்சிங் பங்காவை உலக வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் பரிந்துரை செய்திருந்தார்.

இதையெடுத்து மார்ச் மாதம், உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா விண்ணப்பம் செய்திருந்தார். ஏற்கனவே அமெரிக்க அதிபர் வெளிப்படையாக அறிவித்துவிட்ட காரணத்தால் யாரும் அவரை எதிர்த்து போட்டியிட முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இம்மாதம் 3ம் தேதி உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், உலக வங்கியின் தலைவராக அஜய் பங்காவை உலக வங்கி நிர்வாக இயக்குனர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளதாகவும் அவரோடு இணைந்து பணியாற்றுவதில் இயக்குநர்கள் குழு ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

யார் இந்த பங்கா?

இந்தியாவில் பிறந்து வளர்ந்த அஜய் பங்கா, மாஸ்டர் கார்டு நிறுவனத்தில் தலைவராக பதவி வகித்தவர். தற்போது அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத்தலைவராக பொறுப்பு வகிக்கிறார். அஜய் பங்காவுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 2 ம் தேதி உலக வங்கி தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளும் அஜய் பங்கா 2027 வரை அப்பதவியில் இருப்பார்.

கொரானா வைரஸ் பாதிப்பு, உக்ரைன் போர் உள்ளிட்ட விஷயங்களால் பொருளாதார பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்காவில், வரும் காலாண்டில் நிதி செலுத்துவதற்கு போதுமான பணம் இல்லை என்று கூறப்படுகிறது.

கடன் உச்சவரம்பை இம்மாத இறுதிக்குள் உயர்த்தாவிட்டால் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகளவில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். மக்கள் சேவைகளுக்கும் மற்ற அத்தியாவசிய செலவுகளுக்கும் நிதி திரட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடும். நிதி பற்றாக்குறை பிரச்சினையை சரி செய்ய 31.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் வாங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படியொரு நெருக்கடியான காலகட்டத்தில்தான் அஜய் பங்கா, உலக வங்கி தலைவராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். அஜய் பங்கா மீது ஜோ பைடன் அபார நம்பிக்கை வைத்திருப்பது தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com