
அரக்கோணம் நெமிலி அருகே கீழவீதியில் மண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மயிலர் திருவிழா நடைபெற்று வந்தபோது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கீழவீதியில் மண்டியம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக, மயிலர் திருவிழா நடைபெற்று வந்தது. அதில் கிரேன் மூலம் மாலை அணிவிக்க முயன்றபோது, கிரேன் கவிழ்ந்து விழுந்து இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்நிலையில் இதில் சிக்கிய சின்னச்சாமி என்பவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக நெமிலி வட்டாட்சியர் சுமதி , கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.