இந்திய தண்டனைச் சட்டம் இனி கிடையாது!

இந்திய தண்டனைச் சட்டம் இனி கிடையாது!
Published on

ந்திய காவல்துறை, நீதிமன்றம் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்புகளால் பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் ஒரு வாக்கியம் இந்திய தண்டனைச் சட்டம். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் போன்ற அனைத்து சட்டங்களுக்கும் இனி புதிய பெயர் சூட்டுவது என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்திருக்கிறார்.

அதன்படி, ‘இந்திய தண்டனைச் சட்டம்’ என்பதற்கு பதில், ‘பாரதிய நியாய சன்ஹிதா’ என்றும், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு’ பதில், ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ என்றும், ‘இந்திய சாட்சியச் சட்டத்துக்கு பதில், ‘பாரதிய சாக்ஷ்யா’ என்றும் பெயர் மாற்றம் செய்யும் சட்ட திருத்த மசோதாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த சட்டங்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்படவில்லை, அதன் உள்ளே இருக்கும் பல அடிப்படைக் கூறுகளும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. மேற்கண்ட இந்த மூன்று சட்டங்கள்தான் ஒருவரை கைது செய்வது, அவரை விசாரிப்பது, வழக்குகளை நடத்துவது, குற்றங்களைக் கண்காணிப்பது, சாட்சியங்களை விசாரிப்பது போன்ற பல விஷயங்களை எப்படி மேற்கொள்வது என்று கூறி வருகிறது.

இந்திய தண்டனைச் சட்டம், அதாவது ஐபிசி எனும் சொற்றொடர்தான் இந்தியாவின் அனைத்து காவல்துறைகளிலும் பயன்படுத்தப்பட்டுவரும் சட்ட வாக்கியம் ஆகும். இனி, அதை மொத்தமாக மாற்றும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் அமித் ஷா கொண்டுவந்திருப்பதால் இனி ஐபிசி எனும் வார்த்தையே இருக்காது. மத்திய அமைச்சரின் இந்தப் புதிய சட்ட திருத்த மசோதா பலரிடையே கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் புதிய சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றிருக்கும் புதிய சட்டங்கள் பற்றிய விவரங்கள் இனி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிரிவினைச் செயல்கள், ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பது தொடர்பான புதிய குற்றம் ஒன்றும் இந்த சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனை விதிகளும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல இடங்களிலும் பாஜகவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் நிலையில், ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது இந்தியாவின் இறையாண்மை தொடர்பான புதிய சட்ட விதிகள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சட்ட திருத்த மசோதா மூலம் இதுவரை நாம் பயன்படுத்தி வந்த அடிப்படை தண்டனை விதிகள் அனைத்தும் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com