மாணவிகளை விடைத்தாளுடன் முகப்பு சீட்டு தைக்க வைத்த விவகாரம்... தலைமை ஆசிரியை சஸ்பென்ட்.

மாணவிகளை விடைத்தாளுடன் முகப்பு சீட்டு தைக்க வைத்த  விவகாரம்...  தலைமை ஆசிரியை சஸ்பென்ட்.
Published on

மாணவிகளை விடைத்தாளுடன் முகப்பு சீட்டு தைக்க வைத்த  பள்ளி தலைமை ஆசிரியை உட்பட இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்த முதன்மை கல்வி அதிகாரியின் அதிரடி நடவடிக்கையை அனைவரும் வரவேற்றுள்ளனர். கற்றுத்தரும் ஆசிரியர்களே விதிகளை கடைபிடிக்கத் தவறினால் இது போன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் காட்டுகிறது சேலத்தில் நடந்த இந்த சம்பவம்.

 பிளஸ் டூ பொதுத்தேர்வு வருகிற 13-ஆம் தேதி துவங்க உள்ளது. தேர்வினை எழுதும் உள்ள மாணவ மாணவி களுக்கான விடைத்தாளுடன் புகைப்படம், பதிவு எண் ஆகியவை அடங்கிய முகப்பு சீட்டு வைக்க உத்தர விட்டுள்ளது கல்வித்துறை. இதை ஏற்று முகப்புச் சீட்டு தைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்திலும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அதே நேரம் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்றால் அருகில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை இந்த பணிக்கு பயன்படுத்தலாம் என்ற விதிமுறை உள்ளது. இந்த நிலையில் சேலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாளுடன் முகப்பு சீட்டுகளை அந்தப் பள்ளியின் மாணவிகளே தைப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று முன்தினம் பரவியது. இதைப் பார்த்தவர்கள் ஆசிரியர்களின் பணியை மாணவிகள் செய்வது எப்படி? எனும் கேள்வியை எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து மாணவிகளை விடைத்தாளுடன் வகுப்பு சீட்டில் தைக்க வைத்த அரசுப் பள்ளி எது என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இந்த சம்பவம் சேலத்தில் பெயர் பெற்ற சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்வாணி மற்றும் தையல் ஆசிரியை செல்வி ஆகிய இருவரையும் பணியிட நீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டுள்ளார். அரசு பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில் விடைத்தாளுடன் முகப்பு சீட்டு தைக்கும் விவகாரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை உள்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது சேலத்தின் கல்வித்துறை வட்டாரத்திலும் ஆசிரியர்கள், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிள்ளைகள் பள்ளிக்கு வருவது பாடங்களைப் படிப்பதற்கு மட்டுமே. ஆசிரியர்கள் தரும் தங்களுக்குத் தேவையற்ற பணிகளை செய்ய அல்ல. என்றுதான் இந்த ஆசிரியப் பெருமக்கள் இது போன்ற செயல்களைத் தவிர்ப்பார்களோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com