தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளது 'தி கேரளா ஸ்டோரி' - பிரதமர் நரேந்திர மோடி!

தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளது 'தி கேரளா ஸ்டோரி' - பிரதமர் நரேந்திர மோடி!

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி கர்நாடகாவில் 3 நாட்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட இருக்கிறார். நேற்று பிற்பகல் பெல்லாரியில் அவர் பிரச்சாரம் செய்தார்.கர்நாடக மாநிலம் பெல்லாரியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்தின் டீசரில், கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

இதற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்படத்தை ஆதரித்துப் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

கர்நாடக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது: ”'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் சமூகத்தில் பயங்கரவாதத்தால் ஏற்படும் விளைவுகளை அம்பலப்படுத்த முயற்சிக்கிறது. குறிப்பாக, கேரளா போன்ற அழகான ஒரு மாநிலத்தில், உழைப்பாளிகளையும், சிறந்த திறமைசாலிகளையும், அறிவு ஜீவிகளையும் கொண்ட மாநிலத்தில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை அம்பலப்படுத்துகிறது.

ஆனால், காங்கிரஸ் கட்சி அப்படத்தை தடை செய்து பயங்கரவாத சக்திகளுக்கு உதவ நினைக்கிறது. காங்கிரஸுக்கு தடை செய்வதும், வளர்ச்சியைக் கண்டு கொள்ளாமல் செல்வதும்தான் தெரியும். காங்கிரஸ் கட்சிக்கு நான் 'ஜெய் பஜ்ரங் பலி' சொல்வதில்கூட ஒரு சிக்கல் இருக்கிறது.

'தி கேரளா ஸ்டோரி' தி'ரைப்படம் சமூகத்தில் புரையோடும் ஒரு புதுவித பயங்கரவாதத்தை அடையாளப்படுத்தி இருக்கிறது. பயங்கரவாதத்திற்கு ஆயுதங்கள், குண்டுகள் தாண்டி இப்போது புதிய முகம் இருக்கிறது. அதைத்தான் இப்படம் அம்பலப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின்போது அவர்கள் பயங்கரவாதத்தின் முன் மண்டியிட்டனர். காங்கிரஸ் இந்த தேசத்தை எப்போதுமே பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாக்கவில்லை. அதனால் இந்த தேசம் நிறைய வருந்தியுள்ளது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கர்நாடகாவை எப்படிக் காப்பாற்றும்?” என்று பிரதமர் மோடி பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com