மீண்டும் சூடு பிடிக்கிறது கொடநாடு கொள்ளை வழக்கு!

மீண்டும் சூடு பிடிக்கிறது கொடநாடு கொள்ளை வழக்கு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவருக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு பங்களாவில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள், பல முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்தக் கொள்ளையைத் தடுக்க முயன்ற மற்றொரு காவலாளி கிருஷ்ணதபாவும் காயமடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் தனது மனைவியுடன் காரில் செல்லும்போது மர்மமான முறையில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் சயான், வாளையாறு மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய பத்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு ஆரம்பத்தில் இருந்தே மர்மமான முறையில் இருந்து வருவதால், வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் விசாரணை நடத்தினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்தாலும் இன்று வரை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த விசாரணையில் அதிமுகவின் முக்கிய பிரமுர்களுக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி, இந்த வழக்கு அதிரடியாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து கோவை மாவட்ட சிபிசிஐடி போலீசார் முதலில் இருந்து இந்த கொலை, கொள்ளை வழக்கை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை, கொலை சம்பவம் நடந்த நேரத்தில் அதிமுகவின் ஆட்சி நடந்து வந்தது. அப்போது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருங்கிய மற்றும் நம்பகமான நபராக டிஎஸ்பி கனகராஜ் இருந்தார். அதோடு இவர், எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் டிஎஸ்பி கனகராஜுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை முடிவில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல், தலைமையிலான போலீசார் சென்னை மந்தைவெளியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கும் டிஎஸ்பி கனகராஜ் வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பாகவும், கொள்ளை நடந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கு விபரங்களை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கனகராஜ் ஆவடி ஆயுதப்படை உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com