பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்தியதற்காக  ‘பாரத் மாத கி ஜெய்’ என முழங்கி மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட மனிதர்! - வைரல் விடியோ!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்தியதற்காக  ‘பாரத் மாத கி ஜெய்’ என முழங்கி மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட மனிதர்! - வைரல் விடியோ!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரித்ததற்காக 'பாரத் மாதா கி ஜெய்' என முழங்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோவா நபர் ஒருவர் வற்புறுத்தப்பட்டிருக்கிறார். இப்படி மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏன் வந்தது? அதற்கு ஒரு பின்புலம் இருக்கிறது என்கிறார்கள். அது என்னவென்றால்,

சில தினங்களுக்கு முன் டிராவல் விலாகர் ஒருவர் வெளியிட்ட தேதி குறிப்பிடப்படாத வீடியோ ஒன்று வைரலானது.

அந்த வைரல் வீடியோதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

அந்த வீடியோவில், வடக்கு கோவாவில் உள்ள கலங்குடே எனுமிடத்தில் உள்ள கடை உரிமையாளர் ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரிப்பதாகக் கூறி இருந்தார். வீடியோ எடுக்கப்பட்டபோது நமது அண்டை நாடான பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில்தான் டிராவல் விலாகர், அந்தக் கடை உரிமையாளரிடம் உரையாடி வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

வீடியோவில் விலாகர் அந்த நபருடன் உரையாடும் போது,  ‘யார் விளையாடுகிறார்கள்? நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள், யாரை உற்சாகப்படுத்துகிறீர்கள்?’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு கோவா மனிதர்  ‘பாகிஸ்தானுக்கு...’ என்று பதில் அளிக்கிறார். அதற்கு விலாகர்...  ‘ஏன்’? என்று கேள்வி எழுப்ப,  ‘இது முஸ்லிம் பகுதி’ என்று பதில் கூறுகிறார் அந்த மனிதர்.

இவ்விதமாக கோவாவில் வசிக்கும் நபர் ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்த இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சில மனிதர்கள் ஒரு குழுவாகத் திரண்டு கலங்குடேவில் கடை வைத்திருக்கும் கோவா மனிதரைத் தேடிச் செல்கிறார்கள்

குழுவாக அவரை அணுகிய அந்த நபர்கள், அந்த மனிதரை மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்திய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் "இந்தக் கிராமம் முழுவதும் கலங்குட். இங்கு முஸ்லீம் மார்கமோ அல்லது வேறு எந்த மார்கமோ இங்கு இல்லை. மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரிக்காதீர்கள்" என்று அந்த நபரிடம் குழு உறுப்பினர் ஒருவர் கூறுவதை அந்த வீடியோ நமக்குக் காட்டுகிறது.

பின்னர் முன்னதாக வெளிவந்த வீடியோவில் பாகிஸ்தானை உற்சாகப்படுத்துவேன் என்று அவர் கூறியதற்காக இப்போது அவர் மண்டியிட்டு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த வீடியோவில் அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆரம்ப தயக்கத்திற்குப் பிறகு, அந்தக் கடை உரிமையாளர் மண்டியிட்டு காதுகளைப் பிடித்து மன்னிப்பு கேட்பதை அந்த  வீடியோவில் நாம் காணலாம்.

அந்த குழு அவரை 'பாரத் மாதா கி ஜெய்' கோஷத்தை எழுப்பச் சொல்லி வற்புறுத்துவதையும் வீடியோ காட்டுகிறது.

இது குறித்து உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, ​​​​இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையிலும் எந்த புகாரும் காவல்துறையில் பதிவாகவில்லை என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com