அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற திரைப்படத் துறையினர் நலவாரியக் குழுக் கூட்டம்!

திரைப்படத் துறையினர் நலவாரியக் குழுக் கூட்டம்
திரைப்படத் துறையினர் நலவாரியக் குழுக் கூட்டம்
Published on

திரைப்படத் துறையினரின் நலவாரிய ஏழாவது குழுக்கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “முத்தமிழறிஞர் கலைஞரால் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பல்வேறு திரைப்பட துறை சார்ந்த சங்கங்களின் 27,125 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் இந்த வாரியத்தின் சார்பில் 22 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று வரையில் 3,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

திரைப்பட நலவாரிய உறுப்பினரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி எஸ்.முருகன் வழங்கியுள்ள முக்கிய கோரிக்கைகளான,  நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், உறுப்பினர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துதல், மருத்துவ காப்பீடு வழங்கிட ஏற்பாடு செய்தல், உறுப்பினர் சேர்க்கையினை இணையதளம் மூலம் சேர்த்தல்  / புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆவன செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், திரைப்பட நலவாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளான கல்வி உதவித் தொகை 112 நபர்களுக்கும், திருமண உதவித்தொகை 6 நபர்களுக்கும், கண் கண்ணாடி செலவுத் தொகை 5 நபர்களுக்கும், விபத்து மரண உதவித் தொகை 1 நபருக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 31 குடும்பங்களுக்கும் என மொத்தம் 8,15,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கான ஒப்புதலும் மேலும், இந்த நலத்திட்ட உதவிகளை கால விரயமின்றி 3 மாதத்திற்கு ஒருமுறை வழங்கிடவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

திரைப்படத் துறையினர் நலவாரியக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திரைப்படத் துறையினர் நலவாரியக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

முன்னதாக, பூச்சி எஸ்.முருகன் பேசுகையில், “திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படுவதற்கும், சென்னை தரமணி தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 அதிநவீன படப்பிடிப்புத் தளங்கள் அமைத்திட அரசாணை வெளியிட்டமைக்கும், திரைப்படத் துறையினரின் நலன்களைப் பேணிட இந்த நலவாரியத்தினை உருவாக்கிய கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு அரசின் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடியமைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருக்கும் திரைப்பட நலவாரிய உறுப்பினர்கள் சார்பாகவும், கலைத்துறையின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்:
பணயக்கைதிகளை விடுவிக்கிறதா இஸ்ரேல்? முடிவுக்கு வருகிறதா போர்?
திரைப்படத் துறையினர் நலவாரியக் குழுக் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் அலுவல் சார்ந்த உறுப்பினர்களான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.இராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறையின்  இயக்குநர்/உறுப்பினர் செயலர் மரு.இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் (செய்தி) ச.செல்வராஜ், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) மு.பா.அன்புச்சோழன் மற்றும் பல்வேறு துறையின் அலுவல் சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com