புதுப்பொலிவு பெறும் வள்ளுவர் கோட்டத்தின் புனரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்!

Valluvar Kottam
வள்ளுவர் கோட்டம்
Published on

சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக விளங்குவது வள்ளுவர் கோட்டம். உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவர் புகழினை உலகெங்கிலும் கொண்டு செல்லும் விதமாக, 1976ம் ஆண்டு வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது. ‘கலையழகும், கம்பீரமும் கொண்டு திகழும் வள்ளுவர் கோட்டத்தின் புனரமைப்புப் பணிகள் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த அளவில் மேற்கொள்ளப்படும்’ என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி 2023 - 2024ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்திருந்தார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியால் வள்ளுவர் கோட்டம், வடிவமைக்கப்பட்டு 18.9.1974 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டி முடிக்கப்பட்டபின் 15.4.1976 அன்று திறந்து வைக்கப்பட்டது. உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கலை நுணுக்கத்தோடு, ஆசியாவிலேயே மிகப்பெரியதாக, நடுவில் தூணே இல்லாத அரங்கத்துடன், திருவாரூர் தேரையே சென்னை மாநகருக்குக் கொண்டு வந்ததுபோல் சிற்பத்தேர் உருவாக்கப்பட்டு அதனை வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய் நிர்மாணித்துக் காண்போரைக் கவரும் வண்ணம் இது கட்டப்பட்டுள்ளது.

உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவரின் புகழ் போற்றும் இந்த மாபெரும் கலைச் சின்னமாகிய வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கம் மற்றும் பூங்காவை பராமரிக்கவும், தேர், கோபுரம், கலசம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றின் நிழல் உருவம் தெரியும் வண்ணம் அமையப்பெற்றிருக்கும் நீர் நிலைகளைப் பராமரிக்கவும், கோட்டம் ஒளிமிக்கதாக என்றென்றும் திகழவும், பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுகளிக்கவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைப் பல மடங்கு உயர்த்தவும் வள்ளுவர் கோட்டத்தினைக் காலச் சூழலுக்கு ஏற்றவாறும், மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடனும் கலையம்சம் மாறாமல் புனரமைத்திடவும் 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 13.7.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன - அரசு வெளியிட்ட அறிக்கை!
Valluvar Kottam

அதன்படி, அய்யன் வள்ளுவர் கோட்டத்தின் புனரமைப்புப் பணிகள், புதிய கட்டுமானப் பணிகள், கூடுதல் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுடன் நடைபெற்றுவரும் புனரமைப்புப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயகர் முன்னிலையில் செய்யப்பட்ட இந்த ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அமைச்சர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது செய்தித்துறை கூடுதல் இயக்குநர் எஸ்.செல்வராஜ், இணை இயக்குநர் கு.தமிழ்செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com