மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம்! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

தூய்மை சார்ந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பன்னெடும்காலமாக மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் குறித்து சமுக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவிப்பு சற்று ஆறுதலாக இருக்கிறது எனலாம்

ஆதித் தமிழர் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கையால் மலம் அள்ள தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுக்கான சட்டம் 2013ல் கொண்டு வரப்பட்டது. சட்டம் அமலாவதை கண்காணிக்கும் வகையில் மாநிலந்தோறும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறிய வேண்டும்.

அவர்களது மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். தொழில் நுட்ப ரீதியிலான உபகரணங்கள் இல்லை. சட்டத்தை மீறி பணியில் ஈடுபடுத்துவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதில்லை. ரயில்வே மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் பலர் தொடர்ந்து கையால் மலம் அள்ளும் பணியில் தான் ஈடுபட்டுள்ளனர்.

samuga avalam
samuga avalam

எனவே, மத்திய, மாநில அளவிலான கண்காணிப்பு குழுக்களையும், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு குழுக்களையும் அமைக்க வேண்டும். கையால் மலம் அள்ளுவதை தடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான மறுவாழ்வை ஏற்படுத்த உத்தர விட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறையை வேறோடு அகற்றிடும் வகையில் கையால் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை சார்ந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். கழிவுநீர் மற்றும் சாக்கடைகள், இயந்திரங்கள் மூலம் மட்டும் அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். மறுவாழ்வு வழங்கப்பட்டவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் அந்த பணிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தக் கூடாது. மனிதக் கழிவை மனிதன் அகற்றுவதில் உள்ள தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக அவர்களின் சமூக தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். இதுவரை இழப்பீடு வழங்காதவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com