நவீன டெஸ்டினேஸன் வெட்டிங்! மருத்துவமனை வார்டில் வைத்து தாலி கட்டிய மணமகன்!

நவீன டெஸ்டினேஸன் வெட்டிங்! மருத்துவமனை வார்டில் வைத்து தாலி கட்டிய மணமகன்!

இந்தக் காலத்தில் ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ தெரியாதவர்கள் யார் இருக்கிறார்கள்? அலையடிக்கும் பீச்சில் பந்தல் அமைத்துக் கல்யாணம் செய்து கொள்வது, விமானத்தில் பறந்து கொண்டே திருமணம் செய்துகொள்வது, நடுக்கடலில் கப்பலில் கல்யாணம், கும்மிருட்டுக் நடுக்காட்டில் மரக்கிளைகளுனூடே கசியும் நட்சத்திர மினுக்கொளியில் கல்யாணம், ஓடும் குதிரை சாரட்டில் அமர்ந்து கல்யாணம், புர்ஜ் கலீஃபா உச்சியில் அமர்ந்து கல்யாணம், ராஜஸ்தான் அரண்மனையில் கல்யாணம், இத்தாலியில் கல்யாணம், பாலை வனத்தில் ஒட்டகங்களின் மீது அம்பாரி அமைத்து அதிலமர்ந்து கல்யாணம் இத்யாதி... இத்யாதி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகலாம். இந்தக் கால இளைஞர்களுக்கு இது தான் டெஸ்டினேஸன் வெட்டிங்.

அதாவது வழக்கமாக திருமணச் சத்திரங்களிலோ அல்லது பெரிய பெரிய மண்டபங்களிலோ அல்லது அவரவர் வசதிக்கேற்ப கிராமப் பொதுக்கூடங்களிலோ அல்லது நட்சத்திர ஹோட்டல் கூடங்களிலோ நிகழ்ந்து கொண்டிருந்த திருமண வைபவங்கள் சலித்துப் போய்விட இன்றைய தலைமுறை இந்த டெஸ்டினேஸன் வெட்டிங் என்று சொல்லப்படக்கூடிய லட்சியத் திருமணங்களைப் புதுசு புதுசாக கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவற்றைப் புதுமையான கல்யாண இலக்குகள் என்று கூட சொல்லிக் கொள்ள வேண்டியது தான். கல்யாணங்கள் இங்கு இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்க ஆந்திராவிலோ இந்த லிஸ்டிலேயே இல்லாத ஒரு புது மெத்தடில் நவீனமாகக் கல்யாணமொன்று நடந்து முடிந்திருக்கிறது. நடந்து முடிந்த அந்தக் கல்யாணம் ஒருவகையில் புத்திசாலித்தனமான முடிவு தான் என்றாலும் எல்லோருக்கும் அவ்விதமான ஐடியா உதித்து விடுமா என்றால்! இல்லையென்று தான் சொல்ல முடியும்.

சரி, இப்போது நடந்தது என்னவென்று அறிந்து கொண்டால் தான் உங்களுக்கு முழுதாக விஷயம் புரிய வரும்.

அடிலாபாத்: மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் மண்டலத்தைச் சேர்ந்த மணப்பெண் ஷைலஜா, லம்பாடிப்பள்ளியில் நிகழவிருந்த தனது திருமண நிகழ்ச்சிக்கு சற்று முன்னதாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய நிலை உருவானது. அடடா! அப்போ திருமணம் பாதியில் நின்று விட்டதா? என்று ஐயப்படுகிறீர்களா? அது தான் இல்லை.

ஷைலஜாவுக்கும் திருப்பதி என்பவருக்கும் பெரியோர்கள் கூடி நிச்சயித்த திருமணம் குறித்த நாளில் நடந்தேறியது. ஆனால், நடந்த முறை தான் சற்று வித்தியாசமானது. திருமணத்திற்கு முன்பு ஷைலஜா உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட வேண்டிய நிலைக்கு உள்ளானதோடு, அவர் குணமடைய வேண்டுமானால் உடனடியாக அறுவை சிகிச்சை ஒன்றும் செய்தாக வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தினர். அதனால் தன் திருமண நாளன்று தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தாக வேண்டிய நிலை உருவானது.

மணமகன் திருப்பதி குடும்பத்தாரும் மருத்துவமனையில் தான் இருந்தார்கள். இம்மாதிரி நேரங்களில் சாதாரணமாக என்ன செய்வார்கள்? ஒன்று திருமணத்தை ஒத்திப் போடுவார்கள், அல்லது மருத்துவரிடம் அறுவை சிகிச்சையை ஒத்திப் போடச் சொல்வார்கள். இங்கு இரண்டுக்குமே வழியற்ற நிலை. உடனே மணமகன் சட்டென்று ஒரு தீர்மானத்திற்கு வந்தார். தன் குடும்பத்தாரிடம் பேசினார். முதலில் பெரியவர்கள் மறுக்கத்தான் செய்தார்கள். ஹாஸ்பிடலில் வைத்து திருமணமா? அதுவும் நோயாளியாக படுத்திருக்கும் மணப்பெண்ணை அவர் இருக்கும் அந்த அறையிலேயே வைத்து மணந்து கொள்வது என்றால் அது சுபசகுனமாகத் தோன்றவில்லையே என்று இரு தரப்பு பெற்றோர்களும் மறுத்திருக்கின்றனர். ஆனால், மணமகன் திருப்பதி அவர்களைப் பேசியே கரைத்திருக்கிறார்.

இரு பக்கத்து குடும்பத்தாரும் தங்களது முழு சேமிப்பையும் இந்த திருமணத்தை நடத்துவதற்கென்றே செலவழித்தாகி விட்டது. இந்த நிலையில் திருமணத்தை ஒத்திப் போட்டு வேறொரு நாளில் இதே விதமாகச் செலவு செய்து திருமண விழா நடத்துவது என்பது முடியாத காரியம். அதற்கு பேசாமல் இப்போதே திருமணத்தை இங்கேயே முடித்து விடுவதே உத்தமம் என்று திருப்பதி கூறியதை இருபக்கத்துப் பெற்றோரும் ஒப்புக் கொள்ளவே ஒருவழியாக நேற்று வியாழனன்று மருத்துவமனை வார்டில் வைத்து ஷைலஜா, திருப்பதி திருமணம் இனிதே நடந்தேறியது. தம்பதிகள் தாலி கட்டி, மலர் மாலைகளை மாற்றிக் கொண்டனர். திருமணத்தை நடத்தி வைத்த ஃபாதிரியார் அவர்களை வாழ்த்தினார். உற்றார், உறவினர் வாழ்த்துகளுடன் பெற்றோரை மேலும் சிரமப் படுத்தாமல் மிக அமைதியான முறையில் இவர்களது திருமணம் நடந்தேறியது என்பதாகத் தகவல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com