Dengue
Dengue

டெங்கு நோயை பரப்பும் கொசுவுக்கு இப்படி ஒரு திறமையா?- விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

Published on

டெங்கு நோயைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களுக்கு, ஒரு தனித்துவமான திறன் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய ஆய்வு, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டெங்கு காய்ச்சல் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு கடுமையான வைரஸ் நோய். இந்த நோயைப் பரப்பும் முக்கிய காரணி, ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) வகையைச் சேர்ந்த கொசுக்கள்தான். இந்தக் கொசுக்கள், பகல் நேரத்தில் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டவை. இவை மற்ற கொசுக்களைவிட சற்று பெரியதாகவும், அவற்றின் உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிறக் கோடுகள் இருப்பதும் இவற்றின் தனிப்பட்ட அடையாளம்.

டெங்கு கொசுக்கள் தேங்கிய சுத்தமான நீரில்தான் இனப்பெருக்கம் செய்யும். டயர்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கவர்கள், பழைய பாட்டில்கள், பூந்தொட்டிகள், நீர் சேகரிப்புத் தொட்டிகள், மரப் பொந்துகள் போன்ற இடங்களில் தேங்கும் சிறிதளவு நீரில்கூட இவை முட்டையிட முடியும். இந்தக் கொசுக்கள் ஒருமுறை முட்டையிட்டால், அந்த முட்டைகள் வறண்ட நிலையில் பல மாதங்கள் உயிருடன் இருக்க முடியும். மீண்டும் நீர் தேங்கும் போது, அவை லார்வாக்களாகப் பொரித்து, பின்னர் கொசுக்களாக மாறும். இந்த வாழ்க்கைச் சுழற்சி மிகவும் குறுகிய காலத்தில் (சுமார் ஒரு வாரம்) நிறைவடைவதால், கொசுக்களின் எண்ணிக்கை மிக வேகமாகப் பெருகும்.

இதுவரை, கொசுக்கள் மனிதர்களின் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு மற்றும் வியர்வை வாசனையை வைத்து அவர்களைக் கண்டறிகின்றன என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில், ஏடிஸ் எஜிப்டி கொசுக்களின் வாசனை உணரும் திறன் பாதிக்கப்பட்டாலும், அவை மனிதர்களின் உடல் வெப்பநிலையை உணர்ந்து அவர்களை நெருங்குவது கண்டறியப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
பெங்களூரின் அடையாளமான லால்பாக்கிற்கு அப்பெயர் எப்படி வந்தது தெரியுமா?
Dengue

இந்த ஆய்வின்படி, கொசுக்களின் வாசனை உணர்வு குறைபாடு அடையும்போது, அவற்றின் கால்களில் உள்ள 'Ir140' என்ற வெப்ப உணர்திறன் கொண்ட ஏற்பி (receptor) மிகவும் சுறுசுறுப்பாகிறது. இந்த ஏற்பி, மனித தோலின் வெப்பத்தை நுட்பமாக உணர்ந்து, கொசுக்களை இலக்கை நோக்கி வழிநடத்துகிறது. இது, ஒரு வகை "மறைமுக வேட்டை" முறை என விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர். 

இந்தக் கண்டுபிடிப்பு, டெங்கு பரவும் முறையைப் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்துகிறது. மனித உடலில் இருந்து வெளிப்படும் வெப்பம், கொசுக்களை ஈர்க்கும் ஒரு முக்கிய காரணி என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இந்த தகவல், கொசுக்களைக் கட்டுப்படுத்தும் புதிய முறைகளை உருவாக்கவும், வெப்பத்தை அடிப்படையாகக் கொண்ட கொசு விரட்டிகள் அல்லது பொறிகளை வடிவமைக்கவும் உதவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

logo
Kalki Online
kalkionline.com