புளோரிடாவைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவர் யூட்யூபில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அவர் எலும்பு கூட்டை வைத்து கிட்டார் செய்திருக்கிறார். அதுவும் யாருடைய எலும்பு கூடு என்று தெரிந்தால் ஷாக்தான்.
தங்களது திறமைகளை உலகிற்கு காண்பிக்க முக்கிய பாலமாக செயல்படுவது யூட்யூப். அந்தவகையில் இசை கலைஞர் ஒருவர் தனது இசை திறமையை வீடியோக்கள் மூலம் பகிர்ந்து வருகிறார். புளோரிடாவைச் சேர்ந்த இசைக்கலைஞர் பிரின்ஸ், மிட்நைட் பிரண்ட்ஸ் என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்தி வருகிறார். அதில்தான் தனது வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவர்தான் எலும்புக்கூடை வைத்து கிட்டார் செய்திருக்கிறார்.
இவரது மாமா பிலிப்ஸ் 1996ம் ஆண்டு உயிரிழந்தார். இவரது எலும்பு கூடு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த எலும்பு கூடு வைத்து 20 ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்தநிலையில் கல்வி நோக்கங்களுக்கு எலும்புக் கூடுகள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. இதனால் அந்த எலும்பு கூடு மீண்டும் குடும்பத்தாரிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டது. இதனை வைத்து என்ன செய்வது என்று தெரியாத அவர், அந்த எலும்பு கூட்டை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றார்.
பின்னர் இதனை வைத்து ஒரு கிட்டார் செய்ய முடிவு செய்தார். தனது நண்பர்களின் உதவியுடன் கிட்டார் செய்ய ஆரம்பித்தார். ஒரு உலோக கம்பியை முதுகெலும்புடன் இணைத்து கிட்டார் செய்தார். இதனை தனது மாமாவின் ஞாபக அர்த்தமாக தன்னுடன் எப்போதும் வைத்துக்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த வீடியோவை அவர் தனது யூட்யூப் பக்கத்திலும் வெளியிட்டார். இந்த கிட்டாரை வாசிப்பது போன்ற வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.
20 ஆண்டுகள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட அந்த எலும்பு கூடை வீட்டின் ஓரம் போடாமல், அதனை நினைவாக மாற்றியிருக்கிறார். அதுவும் தனக்கு பிடித்த ஒரு கருவியாக மாற்றியிருப்பது வரவேற்பை பெற்று வருகிறது. கல்வித்துறையில் மட்டும்தானே பயன்படுத்தக் கூடாது என்ற தடை உள்ளது? இசைத் துறைக்கு இல்லையே என்று அதனை இப்படி மாற்றி செய்திருக்கிறார் போல….!