தலைமை தேர்தல் ஆணையர், ஆணைய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க புதிய சட்ட விதி: நாடாளுமன்றத்தில் தாக்கல்!

தலைமை தேர்தல் ஆணையர், ஆணைய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க புதிய சட்ட விதி: நாடாளுமன்றத்தில் தாக்கல்!

லைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தேர்தல் ஆணையம் தொடர்பான திருத்தப்பட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அதில், ‘பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் முன்மொழியப்படும் கேபினட் அமைச்சர் கொண்ட குழு, தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையக் குழுவை தேர்வு செய்யும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட மசோதா மூலம் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையக் குழு உறுப்பினர்களின் பணி, செயல்பாடுகள், வரைமுறை ஆகியவை வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், கேபினட் செயலாளர் தலைமையில் தேர்தல் அனுபவம் கொண்ட ஐந்து பேரை உள்ளடக்கிய குழு பெயர்ப் பட்டியலை முதலில் தயாரிக்கும். அதன் பிறகு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் முன்மொழியப்பட்ட கேபினட் அமைச்சர் ஆகியோர் கொண்ட குழு, கேபினட் செயலாளரால் பரிந்துரைத்த பெயரைக் கொண்டு தலைமை தேர்தல் அதிகாரியை தேர்வு செய்யும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது. மேலும், தலைமைத் தேர்தல் அதிகாரியின் சம்பளம், கேபினட் செயலாளருடைய சம்பளத்துக்கு இணையாக இருக்கும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எது முதலில் வந்தடைகிறதோ அதன் அடிப்படையில் புதிய பணி நியமனம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தலைமை நீதிபதி, ‘தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி கொண்ட குழு இணைந்து அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யும்’ என்று தீர்ப்பு வழங்கியிருந்தார். மேலும், பாராளுமன்றத்தில் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்ட மசோதா நிறைவேற்றும் வரை இந்தத் தீர்ப்பு செல்லும் என்றும் அதில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com