புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் பாதிப்பில்லை! விஞ்ஞானி தகவல்!

புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் பாதிப்பில்லை! விஞ்ஞானி தகவல்!

புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் பிஎஃப் 7 வைரஸ் தொற்று, இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று பெங்களூரைச் சேர்ந்த டிஐஜிஎஸ் நிறுவனத்தின் முன்னணி விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

சீனா, அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. உலகில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து, இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

சீனாவில் கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் பிஎஃப் 7 வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலை அளிக்கக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனம் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ஒமிக்ரான் பிஎஃப் 7 வைரஸ் குறித்த இந்த அச்சங்கள் தேவையற்றவை என்று பெங்களூரைச் சேர்ந்த டாடா மரபியல் மற்றும் சமூக நிறுவனமான டிஐஜிஎஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் நாம் மிக கவனமுடன் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

முகக் கவசம் அணிதல், கூட்டத்தை தவிர்த்தல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே இந்தியாவில் பரவிய ஒமிக்ரான் வகை வைரஸ் போன்றதே, சிறிய திரிபுடன் கூடிய ஒமிக்ரான் பிஎஃப் 7 வைரஸ் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com